tamilnadu

கபளீகரம் செய்யப்படும் காவிரி டெல்டா

காவிரி டெல்டாவில் 8ஆவது ஆண்டாக குறுவைச் சாகுபடி இல்லை என்றாகி விட்டது. டெல்டா பகுதியில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். தற்போது மிகக் குறைந்த அளவே ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி நடை பெற்று வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது. நீர் நிலைகள் முழுவதும் வறண்டு காணப்படுகின்றன. டெல்டா என்றால் வண்டல் படிந்த பகுதி என்பதாகும். டெல்டா பாசன முறை மிகப் பழமையானதாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே கரிகால் சோழனால் காவிரியின் குறுக்கே கல்லணை கட்டப்பட்டது. உல கத்திற்கே முன் மாதிரியான அணை என்று சொல்லப்படுகிறது. கல்லணையிலிருந்து மூன்று ஆறுகள் பிரிகின்றன. அவை காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், பின்பு பல்வேறு இடங்களில் 36 ஆறுகளாக பிரிகின்றன.

முழு கொள்ளளவில் தண்ணீர் செல்ல முடியாத நிலை
காவிரி 10,400 கன அடி வெண்ணாறு 9,640 கனஅடி, கல்லணை கால்வாய் 4,400 கன அடி கொள்ளளவு கொண்டதாகும். ஆனால் முழுக் கொள்ளளவில் ஆறுகளில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. காவிரி பாசனம் 4.69 லட்சம் ஏக்கர், வெண்ணாறு பாசனம் 4.50 லட்சம் ஏக்கர், கல்லணை கால்வாய் பாசனம் 2.27 லட்சம் ஏக்கர் ஆகும். காவிரிக்கு இணையான வெண்ணாறு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட ஆறாகும். வெண்ணியாறு என பெயரிடப்பட்டது. மருவி வெண்ணாறு ஆனது. இந்த ஆறுகள் தூர்வாரப்படாததால் முழுக் கொள்ளளவை அவை பெற முடியவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 703 பாசன ஏரிகள். டெல்டா பகுதி முழுவதும் 1,200 ஏரிகள் மன்னர் கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. 5 ஏக்கரிலி ருந்து 1000 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரிகள் உள்ளன. வெண்ணாற்றில் திருகாட்டுப்பள்ளி க்கு அருகே கச்சமங்கலம் என்ற இடத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மலையை வெட்டி வெண்ணாற்றின் போக்கை மாற்றி பாச னத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சேந்தன் அழிசி என்ற மன்னன் இந்த பணியை செய்துள் ளார். கிராமத்திற்கு கிராமம் கோவில்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு குளம் எனத் தமிழர்கள் குளங்களை உருவாக்கியுள்ளனர். இவை தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்து கின்றன. டெல்டாவில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லா உள் கட்டமைப்பையும் உரு வாக்கி நீர் மேலாண்மையில் உலகத்திற்கே முன் உதாரணமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள்.

அரசு ஒதுக்கியதும் ஆளும் கட்சியினர் சுருட்டியதும்
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் புதிதாக எதையும் உருவாக்க வேண்டாம், உள்ளதை பாதுகாத்தாலே போதும். ஏரி, குளங்களை தூர்வார கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. தூர் வார ஒதுக்கிய ரூபாயில் பெரும்பகுதி அரசு அதிகாரிகள், ஆளும் கட்சிக்காரர்களால் கொள்ளை யடிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் டெல்டா ஆறுகளில் இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. தற்போது டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எங்கு பார்த்தாலும் எண்ணெய் எடுக்க துரப்பணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்மாபேட்டை அருகில் தீபாம்பாள்புரம் கிராமத்தில் ஓஎன்ஜிசி-க்கு சொந்தமான 7 எண்ணெய்க்கிணறுகள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு உள்ள 10 எண்ணெய் டேங்கர்களில் எண்ணெய் நிரப்பப்பட்டு நரிமணம் கொண்டு செல்லப்படுகிறது. அதுபோன்ற நூற்றுக்கணக் கான புதிய எண்ணெய்க்கிணறுகள் டெல்டா முழுவதும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நட்ட ஈடு வழங்குவதில் குளறுபடி
நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை யிலிருந்து குழாய் மூலம் திருச்சி வரை எண்ணெய் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அம்மாபேட்டை புளியகுடி பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாய்கள் அமைக்கும் பணி நெல்வயல், கரும்பு வயல் மற்றும் உள்ள பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குழாய் அமைப்பதற்கு அதன் மையப்பகுதியில் இருந்து இரு பக்கமும் 9 மீ இடம் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திற்கு மிகக்குறைந்த நஷ்டஈடு கொடுக்கப் பட்டு உள்ளது. புளியங்குடியில் 1999ஆம் ஆண்டு நடராஜன் என்பவர் நிலத்தை விற்றுள்ளார். தற்போது வாசுகி என்பவர் அந்த நிலத்தை பயிர் செய்து வருகிறார். அவரது நிலத்தில் குழாய் பதிக்க இந்திய எண்ணெய் கழகம் (ioc) நிலத்திற்கான நஷ்டஈட்டை நடராஜ னுக்கு கொடுத்துவிட்டது. காரணம் கேட்டால் வாசுகி பெயருக்கு பட்டா மாறுதல் நடைபெற வில்லை. இப்படி பல குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

கார்ப்பரேட் கொள்ளைக்கு கதவு திறப்பு
விவசாய நிலத்தை இந்த திட்டத்துக்காக எடுப்பதில் எவ்விதமான சட்ட நடைமுறையும் பின்பற்றவில்லை. ஹைட்ரோ கார்பனை அதிக அளவில் எடுத்து எரிக்கப்படுவதால்தான் பூமி வேகமாக வெப்பம் அடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாற்று சக்தியை உலகம் தேடும் போது நமது அரசுகளோ கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க கதவு களை திறந்துவிடுகிறது.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. மிச்சமிருந்த தென்னை மரங்களும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நகரம் என்ற ஊரில் கேஸ் கொண்டு போகும் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் 16 பேர் மரணமடைந்த செய்தி உள்ளது. டெல்டாவில் பல இடங்களில் எண்ணெய்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதை யும் பார்த்து வருகிறோம்.

மீனவர்களுக்கு வழங்குவது போல்...
இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லை. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் எப்போது வரும் எனத் தெரியாது. காவிரி ஆணையம் 19.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் இதுவரை நீர் வந்து சேரவில்லை. அந்த நீரைப் பெற தமிழக அரசோ எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால் 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே நூறு நாள் வேலைத்திட்டம் முறையாகச் செயல் படுத்தப்படவில்லை. மாதக்கணக்கில் கூலி பாக்கி உள்ளது. அதனால் மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்குவது போல் விவசாயத் தொழிலாளர் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காத நிலை வடகிழக்கு பருவ மழை யில் கிடைக்கும் அபரிமிதமான நீரை தேக்க ஏரி, குளங்களை தூர் வாராத நிலைமை, டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறி வித்து பாலைவனமாக்க முயற்சி, பயிர் சாகுபடி களை அழித்து எண்ணெய் குழாய்களை பதித்து விவசாயத்தை நாசமாக்கும் முயற்சி என மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவ னங்களுடன் கூட்டுச் சேர்ந்து டெல்டாவை சூறையாடி பாலைவனமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒன்று கூடுவோம்! போராடுவோம்!

கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

 

;