புதுதில்லி, பிப். 8 -
ஒன்றிய அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்தும், புயல் - மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், தமிழக எம்.பி.க்கள் தில்லியில் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 2023 டிசம்பரில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின. அடுத்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத மழை - வெள்ளப் பாதிப்பைச் சந்தித்தன. பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் இழப்பைச் சந்தித்தினர்.
இந்த மழை - வெள்ளப் பாதிப்புக்கு முதற்கட்டமாக, ரூ. 37 ஆயிரம் கோடியை நிவா ரண நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னதாக ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். உரிய நிவார ணம் ஒதுக்கப்படும் என்றனர். தமிழகத்தின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் நேரில் முறையிட்ட போது, ஜனவரி இறுதியில் நிதி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் உறுதி அளித்திருந்தார்.
எனினும் இதுவரை ஒருபைசா-வைக் கூட தமிழக மழை வெள்ளப் பாதிப்புக்கு ஒன்றிய அரசு வழங்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாக குறைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ-வின் இரண்டாம் கட்டப் பணிகள் உள்ளிட்ட எந்தவொரு வளர்ச்சித் திட்டங் களுக்கும் நிதி ஒதுக்கவில்லை.
இதனைக் கண்டித்து, கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந் தார். அதன்படி, வியாழனன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு, திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் போராட்டம் நடை பெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக - தோழமைக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.