tamilnadu

img

உயர்மின் கோபுரம் அமைக்க வலுக்கட்டாயமாக நிலங்களை பறிக்கும் தமிழக அரசு.... நவம்பர் 18 - விவசாயிகள் சாலைமறியல்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது; புதை வழித்தடம் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஏற்கனவே அமைத்த கோபுரங்களுக்கு வாடகை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்வது, பொய்வழக்கு புனைவது, சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வலியுறுத்தியும், போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில், நவம்பர் 18 அன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சாலைமறியல் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நடைபெறவிருக்கும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தன்னுடைய முழு ஆதரவினை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த சாலை மறியல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்குமாறு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.மேலும், தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உடனடியாக தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டியக்கப் பிரதிநிதிகளை  நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது.

;