tamilnadu

img

பிளஸ்-1ல் விரும்பிய பாடப்பிரிவு கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுக... அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர்கள்  சேர்க்கைக்கு தேர்வு நடத்தும் முறையினை கைவிட வேண்டும்.விண்ணப்பித்த அனைவருக்கும் விரும்பும் பாடப் பிரிவினை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ டி கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களை விட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்த பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயார் செய்து தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அரசின் இந்த அறிவிப்பு கல்விநிலையங்களை நோக்கிவரும் மாணவர்களை விரட்டவே பயன்படும். ஆகவேஅரசு இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும். மேலும் இத் தேர்வு அறிவிப்பு கிராமப்புற ஏழை- எளிய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய கவலையை உருவாக்கி யுள்ளது.

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கூடுதலான இடங்களை ஒதுக்குவதோடு , மாணவர்கள் விரும்பும் புதிய பிரிவுகளையும்  துவங்கி வகுப்புகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பாடப்பிரிவுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தாலும் அவர்களை  சேர்ப்பதற்கான  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.  கூடுதலான வகுப்புகளை ஏற்படுத்தும் போது அதற்கான ஆசிரியர், வகுப்பறை உள்ளிட்ட அனைத்திற்கும் அரசு நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.  சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அருகாமை பள்ளியில் சேரவும்,விரும்பிய பாடப்பிரிவுகிடைத்திடவும் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

;