tamilnadu

img

சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று தனி மேஜிஸ்திரேட் நியமனம்

சென்னை:

மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு அறைக்குள் ஏப்ரல் 20 ஆம் தேதி நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணமும் அவரது ஆட்களும் அங்கு மூன்று மணி நேரம் இருந்து சில ஆவணங்களை எடுத்து வந்து நகல் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 


இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியரும் சில அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.26) அவசர முறையீடு செய்தார். அதில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். 

இந்த குறைபாடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி ஆகியோரை மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில்தான் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் என்றும் கூறினார். 


வட்டாட்சியர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன், பாதுகாப்பு பணியிலிருந்து காவல்துறை உதவி ஆணையர் ஆகியோரது செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் தெரிவித்த பின்னரும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று வினவிய நீதிபதிகள், பாதுகாப்பு விவகாரத்தில் வேண்டுமென்றே கவனக் குறைவாக நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி, காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் குற்றவியல் வழக்கு தொடரவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


மாவட்ட ஆட்சியரைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை

இந்த வழக்கு விசாரணை மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மாவட்ட ஆட்சியரை கேட்காமலேயே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; எனவே 27.4.2019 அன்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக் கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். 

‘‘மாவட்ட ஆட்சியர் அவரது பணியை சரியாக செய்யத் தவறியுள்ளார்; எனவே அவரை விசாரிக்காமலேயே உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது’’ எனக் கூறிய நீதிபதிகள், அந்த இடைக்கால உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் தெரிவித்தனர். 


உதவி ஆட்சியர்...

உதவி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தன்னையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு செய்திருந்தார். உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணையின் போது, உதவி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரிலேயே அனைத்து தவறுகளும் நடைபெற்றுள்ளதாக கூறியிருந்தார். எனவே இந்த வழக்கில் உதவி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனையும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், இந்த ரிட் மனுவில் எதிர் மனுதாரராக அவரை இணைத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்று சு.வெங்கடேசன் தரப்பு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ தெரிவித்தார். இதையடுத்து, ராஜேந்திரனை எதிர் மனுதாரராக ஏற்றுக் கொண்டனர். வாக்கு எண்ணும் போது தனி நபரை மேற்பார்வையாளராக நியமித்து வாக்கு எண்ண வேண்டும் என்று கோரிக்கை சு.வெங்கடேசன் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு

தேர்தல் ஆணையம் தரப்பில் வேறு மாநிலத்திலிருந்து கூடுதல் மாவட்ட மேஜிஸ்திரேட் நியமிப்பதாக உறுதியளித்தனர். 


உள்நோக்கம் கொண்ட மற்றொரு மனு

மேலும், இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என பசும்பொன் பாண்டியன் என்ற சுயேச்சை வேட்பாளர் மதுரையில் மனு செய்திருந்தார். அந்த மனுவை மதுரை நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. அந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, முறைகேடாக செயல்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் பசும்பொன் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மூன்று கோரிக்கைகளும் ஏற்பு

மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும், வாக்கு எண்ணும் போது தனி மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ ஆஜராகி வாதாடினார்.


;