tamilnadu

கடைமடை பகுதி வரை தூர்வாருக;  விவசாயிகளுக்கு கடன் வழங்குக.... விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று நீர் திறக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றுசேர தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர்அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில் கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், சிறு-குறு விவசாயிகளுக்காவது இலவசமாக வழங்க வேண்டும். பம்பு செட் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் டீசலின் விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும். 

மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை மாதவாரியாக பெறுவதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமான தலைவர் நியமிப்பதையும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகஅது தொடர்ந்து செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதை பொருத்தே இந்த ஆண்டு காவிரி பாசனப்பகுதியில் முழுவீச்சில் விவசாயப் பணிகள் நடைபெறுவதையும், விவசாயிகள் முழுமையான நம்பிக்கையுடன் உற்பத்தியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்சுட்டிக்காட்டுகிறது.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;