tamilnadu

img

இ-சேவை மைய ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குக.. அரசு கேபிள் டிவி தலைவரிடம் சிஐடியு மனு அளிப்பு...

சென்னை:
கடந்த 6 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இ- சேவை மைய ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சிஐடியு மனு அளித்து, வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் சிவக்குமாரை சிஐடியு சார்பில் எம். சின்னதுரை எம்எல்ஏ சந்தித்து தமிழ்நாடு இ சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். உடன் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், யுனைட் சங்கத்தின்துணைத் தலைவர் ஆர்.சுகுமார், செயற்குழுஉறுப்பினர் கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் லிமிடெட் கீழ் இயங்கி வரும் சுமார் 587 இ-சேவை மையத்தில் 1,003 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் லிமிடெட்தேர்வு நடத்தி ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தது. ஊழியர்களை  தேர்வு செய்யும்போது  8ஆயிரம் ரூபாய் ஆரம்ப ஊதியம். அதற்கு பிறகு ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை 500.ரூபாய் ஊதியம்உயர்த்தி தரப்படும் எனக் கூறி வேலைக்கு ஆட்களை எடுத்தனர். ஆனால் இதுநாள் வரைஎந்தவித ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை.

முதலில் வருவாய்த் துறையில் சாதி சான்று, வருமான சான்று, இருப்பிடச் சான்று,முதல் பட்டதாரி சான்று என 4 சான்றுகள் வழங்கும் பணியை மட்டும் செய்து வந்தோம். அதன் பின்பு ஒன்றன் பின் ஒன்றாகஇணைக்கப்பட்டு தற்போது வருவாய் துறையில் உள்ள அனைத்து சான்றிதழ்கள் மற்றும்பட்டா மாறுதல், சமூக நலத்துறையில் திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் சேவையையும் ஆரம்பித்தனர். மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர், விதவை,திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வழங்கும் பணி, மேலும் டிஎன்பிஎஸ்சி. தேர்வில் தேர்ச்சிபெறுவோரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பும் சேவைகளையும் இ சேவை ஊழியர்களிடம்  அளித்தனர்.  இ-சேவை ஊழியர்கள் 103-க்கும் மேற்பட்ட சேவைகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறார்கள்.

மிகக் குறைந்த ஊதியம்
2015ஆம் ஆண்டு துவக்கத்தில் 8 ஆயிரம்ரூபாய் சம்பளம் பெற்ற இ-சேவை ஊழியர்கள் 7 ஆண்டுகளாகியும் தற்போது 2021ஆம்ஆண்டும் அதே சம்பளத்தை பெற்று வருகிறோம். ஆனால் சேவைகளை மட்டும் 4இல்இருந்து 103ஆக உயர்த்திய அரசு கேபிள் டிவி நிர்வாகம் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் உழைப்பு சுரண்டல் செய்து வருகிறது. அண்டை  மாநிலங்களான கேரளாமாநிலத்தில் ரூ. 24 ஆயிரம் . ஆந்திர மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் . தெலுங்கானா மாநிலத்தில் ரூ.16 ஆயிரம் என இ சேவை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு டேட்டா ஆபரேட்டர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஊதியம் என்று நாளொன்றுக்கு ரூ. 470 வழங்கி வருகிறது. இந்த ஊதிய வேறுபாட்டினை கலைத்து உண்மையான ஊதியத்தை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் மிகவும் குறைந்த ஊதியமான 7,778 ரூபாயை மாத சம்பளமாக பெற்றுக்கொண்டு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வருகிறோம். 7,778 ரூபாய் சம்பளத்தில் ஊழியர்களால் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழலில் இசேவை ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அரசுகேபிள் டிவி நிறுவனத்திடம் குறைந்தபட்சஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை தெரிவித்துள்ளோம், சட்ட ரீதியாக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு தரப்பில்முறையான பதில் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்பதை தங்களதுகவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதுமட்டுமின்றி கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.அரசின் அனைத்து இணையதள சேவைகளை பொதுமக்களுக்கு எங்கள் மூலமாகவே அரசு இ சேவை மையத்தில் வழங்கப்படுகிறது. எங்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் சேவையையும் கருத்தில் கொண்டுஇ- சேவை மைய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சம்பளம் பிடித்தம்
மேலும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 முதல்ரூ.3,500 வரை எந்தவித காரணமும் இன்றி பிடித்தம் செய்யப்படுகிறது. தமிழக தொழிலாளர் துறையில் தாவா தொடுக்கப்பட்டும் அரசு தரப்பிலும் ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லை. அனைத்து இ சேவை ஊழியர்களும் நாளொன்றுக்கு ஐந்து முறை வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. தொழில்நுட்ப காரணங்களால் ஒரு முறை தவறினாலும் அன்றைய ஊதியம் வெட்டப்படுகிறது. ஐந்து முறை பயோமெட்ரிக் முறை என்பதை இரண்டு முறை என மாற்றி அமைக்க வேண்டும்.

தொழிலாளர்  நலச் சட்டங்கள் அமலாக்கம் 
தமிழக அரசின் டாக் டிவி நிறுவனத்தில் இந்திய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த மறுக்கின்றனர், தமிழகத்தில் பணியாற்றும் இ-சேவை மைய ஊழியர்களுக்கு உரிய ஊதியம், சமூக பாதுகாப்பு சலுகைகளான வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதிவழங்கப்படாமல் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு தொழிலாளர் துறையில் தொழிற்தாவா எழுப்பப்பட்டும் இது நாள் வரை தீர்வு காணாமல் நிலுவையில் உள்ளது. ஈஎஸ்ஐ பணம் பிடித்தம் செய்தும்இதுநாள் வரை அதற்குரிய அட்டை வழங்காமல் உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைபெற முடியாத நிலை உள்ளது. 

சேவைகளை மேற்கொள்ள 
தமிழக இ சேவை மையங்களில் பொது மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ள பேப்பர் மற்றும் டோனர்கள் தேவையான அளவு மையங்களில் இருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தமிழக இ சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் பொதுமக்களுக்கு சேவைகளை துரிதமாக எடுத்துச் செல்ல தாங்கள் தலையிட்டு மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;