tamilnadu

img

ரயில்வே அமைச்சரின் சென்னை வருகையும் அவரது அறிவிப்புகளும்! வரவேற்பும் ! எதிர்ப்பும் !-சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை வந்த ரயில்வே அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரயில் நிலைய சீரமைப்பு

5 ரயில் நிலையங்களை தமிழகத்தில் சீரமைக்க 1700 கோடி இல் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இதில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் அடங்கும் .இந்த ரயில் நிலையங்கள் போதிய வாகன நிறுத்த இடத்தோடு நகரும் படிக்கட்டுகள் மின் தூக்கிகள் உட்பட வசதிகள் செய்யப்பட்டு தண்டவாளத்தின் இருபுறங்களிலும் வாசல் அமைக்கப்பட்டு ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும் என்ற அறிவிப்பினையும், மதுரைக்கு 376 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் கன்னியாகுமரி ரயில் நிலைய முகப்பு விவேகானந்தர் மண்டப முகப்புடன் மாற்றி அமைக்கப்படும் என்று வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. குமரி முனையின் பெருஞ்சிறப்பே முக்கடல் அலையினூடே முப்பால் அருளிய வள்ளுவ பேராசானின் பெருவடிவமே. எனவே வள்ளுவர் சிலை வடிவமைப்பையும் இணைத்து வைக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

பாதுகாப்பு

அதே நேரத்தில் ரயில்வே அமைச்சர் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் எல்லா ரயில் வண்டிகளிலும் குறிப்பாக வந்தே பாரத் ரயிலிலும் மோதல் தவிர்ப்பு கவசம் என்ற கருவியை பொருத்துவதற்கு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தண்டவாளத்தில் பணி செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு ரட்சக் என்ற கவசத்தையும் அளித்து ரயில்வே ஊழியர்கள் இறப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறேன்.

தமிழகத்தில் தமிழ் கற்க வேண்டும்

ரயில்வே அமைச்சர் தமிழகத்தில் ரயில்வேயில் பணியில் சேர்ந்துள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இது வரவேற்புக்குரியது. ஆனால் இது வெறும் ஆலோசனையாக இருந்து பயனில்லை.

ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்ட ஏராளமான வடமாநில ஊழியர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு ரயில்வே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக ரயில்வே பயிற்சிப் பள்ளிகளில் முக்கியமாக திருச்சி பயிற்சி பள்ளியில் தமிழ் ஆசிரியரை நியமித்து இந்தி பேசும் ஊழியர்களுக்கு கட்டாய தமிழ் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு அந்தக் காலம் பணிக்காலமாக கருதப்பட வேண்டும். அப்போதுதான் ஊழியர்களுக்கு தமிழ் பயிற்சி கிடைக்கும் .ஆர்வமும் வரும். அதை விடுத்து வெறும் அறிவிப்பு எந்த பலனையும் தராது.

தனியார்மயம்

அமைச்சர் ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும். ரயில்வே தேசிய ரயில் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் 2031 க்குள்அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும். இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன என்று கேட்க கேட்க விரும்புகிறேன். அனைத்து வண்டிகளும் தனியார்மயம் ஆனால் பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும். பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ரயில்வேயின் வருமானம் இல்லாததால் ஊழியர்கள் சம்பளமும் ஓய்வூதியர்கள் ஓய்வூதியமும் பாதிக்கப்படும். எனவே ஒன்றிய அரசு தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்று கோருகிறேன்.

;