tamilnadu

img

மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்குக.... ஆக.17-ல் வாலிபர்-மாணவர் போராட்டம்

சென்னை:
மருத்துவப் படிப்புக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 17 அன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க மாநிலச் செயலாளர்  வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்று கூறி நீட் தேர்வை திணித்து ஏழை நடுத்தர மாணவர்களின் மருத்துவப்படிப்புக்கான கனவை அழித்துவிட்ட னர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது.இப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்கில் தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்குவழங்கும் மருத்துவ மற்றும் மருத்துவமேற்படிப்புக்கான இடங்களில் தமிழகத்திலுள்ள இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும். தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டு மூவர் குழுவை  அமைத்து மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த அடிப்படையில் இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும். இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும்.  இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 6  அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு உரிமை சிறப்பு மாநாட்டை  நடத்தியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்ட்17 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.  இப்போராட்டத்திற்கு தமிழக இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;