tamilnadu

img

100 நாள் வேலை-பொது விநியோகத்தை முறையாக அமல்படுத்துக... மாநிலம் முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டம்.....

சென்னை:
100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மாதர் சங்க மாநிலத் தலைவர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 14 செவ்வாய்க்கிழமையன்று  தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். பொது வினியோகத்தில் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறையை முறைப்படுத்தி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முறையாக, தரமாக வழங்கிட வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறுநாள் வேலையில் சட்ட கூலியாக 273 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் எங்கேயும் குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை கிடைக்கவில்லை. 30 முதல் 80 நாட்கள் வரை மட்டுமே வேலை கிடைக்கிறது.100 நாள் வேலையை  பேரூராட்சிகளுக்கும்  நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் 100 நாள் வேலை கொடுத்து 600  ரூபாயாக  கூலியை உயர்த்த வேண்டும்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.பொது வினியோக  திட்டத்தில் தற்போதைய முறைகேடுகளை களைந்திட வேண்டும் .அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மானிய விலையில் ரேசன் கடை மூலம் வழங்க வேண்டும். உடனுக்குடன் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உரிய ஆய்வை மேற்கொண்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

உணவு வழங்கல் அலுவலகங்கள்  மற்றும் ரேசன் கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் 90 மையங்களில் நடைபெற்ற போராட்டத்தில்  5526 பெண்கள் கலந்துகொண்டனர். அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி தஞ்சையிலும் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி தேனியிலும் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா மத்திய சென்னையிலும் மாநில பொருளாளர் ஆர். மல்லிகா கோவில்பட்டியிலும்  மத்தியக் குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம் நாகப் பட்டினத்திலும், கே.பாலபாரதி திண்டுக்கல்லிலும் எஸ்.பொன்னுத்தாய் தஞ்சையிலும் ஏ. ராதிகா கோவையிலும் பங்கேற்றனர்.

;