tamilnadu

img

உடல், உளவியல் ரீதியாக பாதிப்பு... ஆன்லைன் வகுப்பு நடத்தும் முடிவை கைவிடுக....

சென்னை:
ஆன்லைன் வகுப்பு  நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் வல்லுநர் குழு  தனது இறுதி அறிக்கையை கொடுப்பதற்கு முன்னரே ,தமிழக அரசு வெளியிட்டுவரும் அறிக்கைகள் பள்ளிகள் திறப்பது குறித்தும், பாடத்திட்டம் குறித்தும் மாநில அரசிடம் தெளிவான திட்டங்கள் இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது.

தமிழகத்திலுள்ள பெரும்பகுதி தனியார் பள்ளிகள் பல்வேறு செல்போன் செயலிகள் மூலம் இணையவழி வகுப்புகளை நடத்திவருகின்றன. இதற்காக ஆண்ட்ராய்டு போன் இல்லாத ஏழை பெற்றோர்கள் கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாத சூழலிலும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அத்தகைய செல்போன்களை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இணையதள சேவைக்காக அதிகமான தொகையை செலவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனாலும்,  இத்தகைய வகுப்புகளில்   மாணவர்களை முழுமையாக பங்கெடுக்கவைக்க இயலவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.  காரணம் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை வசூலிப்பதற்கு செலுத்திய கவனத்தில் சிறுபகுதியைக்கூட மாணவர்களை பங்கெடுக்க வைப்பதில் செலுத்தவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன்  வாங்க இயலாததால் மாணவன் பிரதீப் தற்கொலை செய்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 

இத்தகைய சூழலில்தான் குறைந்தபட்ச தயாரிப்புப் பணிகளைக்கூடச் செய்யாமல் ஆன்லைன் வழி கல்வியை தமிழக அரசு துவங்கியுள்ளது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு எந்தவகையிலும் பலன் தராது என்பது மட்டுமல்ல, அவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே, இணையவழி  வகுப்புகளை நடத்தும் முயற்சிகளை தமிழக அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். மேலும், தமிழக மாணவர்களின் நலன் மற்றும் வாய்ப்புகளை முழுமையாகக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் வகுப்புகளை நடத்திட  தமிழக அரசு திட்டமிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;