சென்னை, ஜூலை 19- சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,517 கொரோனா தொற்று நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரி மற்றும் வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் செயல்படும் சித்த மருத்துவ மையத்தில் 1,748 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 1,318 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . தற்போது 282 ஆண்கள், 148 பெண்கள் உள்ளிட்ட 430 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் வடசென்னை பகுதி மக்களுக்காக சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 401 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 189 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 212 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.