tamilnadu

img

தமிழக மக்கள்-அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் பதறியடித்து பின்வாங்கியது பாஜக.... ‘கொங்குநாடு என்பது பாஜகவின் நிலைப்பாடு அல்ல’ எனக் கூறியது....

சென்னை:
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால், ‘கொங்குநாடு என்பது பாஜகவின் நிலைப்பாடு அல்ல’ என்று கூறி பதறியடித்துக்கொண்டு பின்வாங்கியது பாஜக.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சமீபத்தில் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றார். இவரைப் பற்றி ஒன்றிய அரசு வெளியிட்ட குறிப்பில், ‘எல். முருகன், கொங்குநாடு, தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்திய அரசியலமைப்பு ரீதியாக கொங்குநாடு என்ற வார்த்தைப் பயன்பாடு இல்லை என்றபோதிலும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பற்றியகுறிப்பில் இடம்பெற்றிருந்த இந்த கொங்குநாடு என்ற வார்த்தை பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை சிதைக்கும் பிரிவினை கோஷம் என்று தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கொங்குநாடு என்ற முழக்கத்தை கடுமையாக கண்டித்தன. கொங்கு நாடு என்று பாஜக குழப்புகிறது;கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தது.ஆனால் அதிமுகவில் கொங்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட இதுபற்றி வாய் திறக்கவில்லை. பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் இந்த கோஷத்தை ஆதரித்தனர். கொங்கு நாடு என்பதற்கு இலக்கிய ஆதாரம் உண்டு என்று விசித்திரமான விளக்கத்தை அளித்தனர். தமிழக புதிய பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் மாநிலச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என்று பாஜக கோவை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்றும் பத்திரிகையில் செய்தி வெளியானது.இந்த பிரிவினை கோஷத்தில் தமிழ்நாடு மக்கள்மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்த நிலையில் பாஜக பதறியடித்துக்கொண்டு பின்வாங்கியுள்ளது.

ஜூலை 12 அன்று பாஜகவின் தமிழக ஊடகப்பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொங்குநாடு குறித்தும்தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின்நிலைப்பாடு அல்ல. இதுகுறித்து தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமான முறையில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. எனவே நம்முடைய தனிப்பட்ட எண்ணங்களைகட்சியின் கருத்தாக பாஜக கூட்டங்களில், பத்திரிகைப் பேட்டிகளில் , சமூக வலைதளங்களில் யாரும் இது பற்றி கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கொங்குநாடு என்பது வரலாற்று ரீதியாக அன்றைய சிறு குறு நில மன்னர்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று அழைப்பது உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கொங்குநாடு உருவாக வேண்டும் என்பது பாஜக கருத்து அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

;