tamilnadu

img

கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தை மூடு விழா நடத்தும் அதிகாரிகள்

புதுச்சேரியில் ஊழியர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படுகின்றன. சங்க உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன. மேலும், இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன.  அதன்படி, புதுச்சேரியில் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை யில் மைய கூட்டுறவு விற்பனை விநியோகஸ்தர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் சிறுதானியங்கள் கொள்முதல் செய்து விற்பனை நடைபெற்று வருகிறது.  1985 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கிய இச்சங்கத்தின் நவீன அரிசி ஆலை சார்பில் ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசின்  மீன்வளம், ஆதிதிராவிடர் நலம் ஆகிய துறைகளுக்கு தரமான அரிசி விநியோகம் செய்து வந்தது.  இத்துடன் புதுச்சேரி இளங்கோ நகர், லாஸ்பேட்டை உழவர் சந்தை, பழைய பேருந்து நிலையம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் சங்கத்தின் கிளைகள் தற்போது செயல்பட்டு வருகிறது.  விரிவாக்கம் சமையலுக்கு தேவைப்படும் செக்கு எண்ணெய் வகைகள் சுத்தமாகவும் தரமாகவும் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது மைய கூட்டுறவு விற்பனை சங்கம். ஆனால், போதிய வருமானம் இல்லாமல் தள்ளாடி வந்தது. இந்த நிறுவனத்தையும் அதில் பணியாற்றி வரும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பதற்கு  பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு புதுச்சேரி அரசு உரிமம் பெற்று கொடுத்தது. அதன்படி, புதுச்சேரி நகரத்தில்  6 மாதங்களுக்கு முன்பு பாரத் பெட்ரோல் நிறுவனத்துடன் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு சொந்தமான தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் நவீன அரிசி ஆலை அருகில் திறக்கப்பட்ட இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தரமாக கிடைத்ததால் கூட்டம் அலைமோதியது. நாள் ஒன்றுக்கு ரூ. 6 லட்சம் வரையும் விற்பனையானது என்று கூறப்படுகிறது. இதனால்,  பிள்ளை தோட்டம் பெரியார் சிலை எதிரில் உள்ள கூட்டுறவு கட்டிட மையத்தில் இரண்டாவது பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைப்பதற்கு உரிமம் பெறப்பட்டது. தனியாருக்கு ஆதரவாக அதிகாரிகள் கூட்டுறவு  பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் ஈ.சி.ஆர் சாலையில் ஆளும் கட்சியின் ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதேபோல், வழுதாவூர் சாலையில் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் பினாமி பெயரில் பெட்ரோல் பங்க் திறந்துள்ளார். இந்த இரண்டு பெட்ரோல் பங்க் விற்பனை தற்போது பல மடங்கு சரிந்துள்ளது. இதற்கு காரணம், கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையமாகும்.  எனவே,‘வேலியே பயிரை மேய்ந்த’ கதையாக, தற்போது தட்டாஞ்சாவடி அரசு அச்சக சாலையில் இயங்கி வரும் மைய கூட்டுறவு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மூடுவதற்கு செயற்கையாக  தனியார் முதலாளிகள் ஆதரவோடு, புதுச்சேரி போக்குவரத்துறையில், கூட்டுறவு துறையின் ஒரு சில அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பெட்ரோல் கூட்டுறவு விற்பனை நிலையத்தை மூடுவதற்கு தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையை  போக்குவரத்து காவல்துறை தடுப்பு வேலிகளை அமைத்து மூடியுள்ளது.  வாழ்வாதாரத்தை  இழக்கும் தொழிலாளர்கள்  சாலையை அடைத்து இருப்பதால் பெட்ரோல் பம்ப் விற்பனை பன் மடங்கு சரிந்துள்ளது. இது திட்டமிட்டு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக போக்குவரத்து காவல்துறை செயல்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் 55 தொழிலாளர்கள்  தற்போது புதுச்சேரி மைய கூட்டுறவு விற்பனை  விநியோகஸ்தர்கள் சங்கத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். அரசுத் துறைகளில் ஒரு சில அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் இருந்து கையூட்டு பெறுவதால் ஏற்கெனவே அரசு துறைகளுக்கு  விற்பனை செய்து வந்த அரிசி விநியோகம் தற்போது  தடைப்பட்டுள்ளது. இரா. முருகன்