tamilnadu

img

காந்தியை கொன்றவனின் பெயரில் ஞான சாலையா? தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை:
தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற குற்றவாளி கோட்சே பெயரில் பிஜேபி ஆளும் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஞான சாலை திறக்கப்பட்டுள்ளதற்கு  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மத்திய பிரதேசத்தின் குவாலியரில் “கோட்சே ஞான சாலை” என்பதை இந்து மகா சபை திறந்துள்ளது. இதன் நோக்கம், கோட்சே எத்தகைய தேசபக்தர் என்பதையும், காந்தியைக் கொலை செய்ய அங்குதான் துப்பாக்கி பெறப்பட்டது என்பதையும் மக்களுக்குச் சொல்வது என அது தெரிவித்துள்ளது. இந்த அக்கிரமத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.

தேசப்பிதா காந்தி மத நல்லிணக்கத்திற்காக, குறிப்பாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். அந்த நல்லிணக் கத்தை, ஒற்றுமையை சீர்குலைக்கத்தான் மதவெறியன் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றான். இந்த உண்மையை மக்கள் மனதிலிருந்து அகற்றவே சங் பரிவாரம் தீவிரமாக முயலுகிறது. அதுமட்டுமல்ல, மகாத்மா பலாத்காரத்தை மறுத்து அஹிம்சையை முன்வைத்தவர். சங் பரிவாரமோ எந்த அளவுக்கு பலாத்காரத்தை துதிக்கிறது என்பதை இந்த கோட்சே நினைவகம் உணர்த்துகிறது என்பதையும் மேடை சுட்டிக் காட்டுகிறது.

அந்த துவக்க விழாவில் பாஜக வணங்கும் சாவர்க்கர், ஆர்எஸ் எஸ்சின் ஹெட்கேவார், ஜனசங்கத்தை துவக்கிய சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்து மகா சபையாலும் வணங்கப் பட்டுள்ளார். இந்த அமைப்புகள் எல்லாம் சங் பரிவாரிகளே, கோட்சேயின் வாரிசுகளே என் பதை இது உணர்த்துகிறது. அந்த மாநில பாஜக அரசின் ஆசிர்வாதத்துடன்தான் இது நடந்துள்ளது.

மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம்
தமிழ்நாட்டிலும் சங் பரிவாரம் மத நல்லிணக்கத்தை கெடுக்க பல வழிகளில் முயன்று வருவதை மேடை நினைவு படுத்துகிறது. பாஜகவின் வேல் யாத்திரையிலும், அதன் ஒரு துணைஅமைப்பானது அரசு தரும் பொங்கல் பரிசை சிறுபான்மை மதத்தவருக்கு தரக் கூடாது எனச் சொல்வதிலும் அதைக் காணலாம். “தாமரை பொங்கல்” என்ற பெயரில் மதுரையில் ஒரு சிறுபான்மை மதத்தவரது வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதல் நடத்தியதிலும் அதை உணரலாம்.

மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்
சங் பரிவாரத்தின் இந்த மதப் பகைமை மூட்டலுக்கு எதிராக மக்களை எச்சரிக்கை செய்யவே ஒரு கோடிப்பேரைச் சந்திக்கும் மாபெரும் மக்கள் இயக்கத்தை மக்கள் ஒற்றுமை மேடை நடத்துகிறது. குடியரசு தினமான ஜன.26ல் துவங்கி காந்தியை கோட்சே சுட்டுக் கொன்ற ஜன.30 வரை அது நடைபெறுகிறது. அதற்கான “மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்” எனும் துண்டறிக்கை தயாராகி விட்டது. காணொளி காட்சிகள் தயாராகி வருகின்றன.வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். மத்தியப் பிரதேசம் போல தமிழகமும் கோட்சே தேசமாகிவிடாது தடுக்கவே மக்களை நேரடியாகச் சந்திக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது மேடை. இதை வெற்றிகரமாக்கிட மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் உதவுமாறு உரிமையோடு அது கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

;