tamilnadu

நிவர் புயல்: சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு....

சென்னை:
நிவர் புயல் காரணமாக செவ்வாயன்றும் புதனன்றும் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, கோவிட்-19 பரவல் காரணமாகவும் பிஹார் தேர்தல் காரணமாகவும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 21 -ம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதும் 1,085 மையங்களில் டிசம்பர் 14-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே நிவர் புயல் காரணமாக நவ.24, நவ.25 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த கணக்குத் தணிக்கையாளர் எனப்படும் சிஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதற்குப் பதிலாக இந்த பகுதிகளில் மட்டும் இடைநிலைத் தேர்வுகள் டிசம்பர் 9 ஆம் தேதியும் இறுதித் தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதியும் நடைபெறும். தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட செய்தி, மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்படும். தேர்வெழுத ஏற்கெனவே வழங்கப் பட்ட ஹால் டிக்கெட் மாற்றப்பட்ட தேதியன்று நடைபெறும் தேர்வுக்கும் செல்லுபடியாகும்.எனினும் மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர, பிற நகரங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;