போலி இ-பாஸ்: 5 பேர் கைது
சென்னையில் சட்ட விரோதமாக இ.பாஸ் வழங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் உதயா உள்ளிட்ட 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பிரசவம் பார்த்தவர்களுக்கு தொற்று
பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார். அவருக்கு பிரசவம் பார்த்த 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனு...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஆற்காடு கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் சிலையை சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
வேண்டுகோள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க சிப்காட் தொழிற்சாலை திறந்ததே காரணம் என்றும், மாவட்ட ஆட்சியரின் அலட்சியத்தால் அதிகளவு தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் எம்.கே.
விஷ்ணு பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குண்டு வீச்சு...
ஓசூர் அப்துல்கலாம் நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அக்பர் பாஷா என்பவர் வீட்டின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். இதுகுறித்து ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் கூட நகரம் செல்லும் சாலையில் ஜோதி என்பவரின் மளிகை கடை பூட்டை உடைத்து 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற லாரி ஓட்டுனர் ஜானகிராமன், நாகராஜ், லோடு ஆட்டோ ஓட்டுனர் சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து 22 டன் ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சீல்...
திருப்பத்தூரில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 3 ஜவுளி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மோகன் சீல் வைத்தார்.