இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஏற்கனவே இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றிருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய செல்வராஜ், எம்.பி., உடல் நலம் பாதிப்பு காரணமாக கடந்த சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் 2.40 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தோழர் எம். செல்வராசு எம் பி உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்
நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்ந்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.