tamilnadu

img

தனியாரின் பிடியில் சிக்கித் திணறும் மருத்துவமும், கல்வியும்... ஏழை மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்க : சிபிஎம்

சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் உடனடியாக சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவசர அவசியத்துடன் அரசு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழக அரசு அமைத்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான ஆலோசனைகளை அளித்துள்ளது. அதில் சுகாதாரம், மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறியிருப்பதாவது:

1. கல்வித் துறையும் மருத்துவத் துறையும் வேகமாக தனியார் மயமாகி சேவை என்ற குணாம்சத்தில் இருந்து மாறி லாபம் கொழிக்கும் தொழில்கள் ஆகியுள்ளன. அரசுசமூகக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதன் மூலம்கல்விக்கட்டணம், மருத்துவ கட்டணத்தை ஒருகட்டுக்குள் கொண்டுவர முடியும். 25 சதவிகிதஏழை குடும்பங்களுக்கு இலவசமாக இடம் தர முடியும். 

2. கல்வி, சுகாதாரம், சாதாரண மக்களுக்கான கட்டமைப்பு ஆகிய துறைகளில் மிக கணிசமான அரசு முதலீடுகள் தேவை. கொரோனா தொற்றின் துயரங்கள் கற்றுக்கொடுக்கும் ஒரு முக்கிய படிப்பினை, மக்களுக்கான சுகாதாரபாதுகாப்பு, பொதுத் துறை மூலம்தான் சாத்தியம் என்பதாகும். நோய் தடுப்பு நடவடிக்கைகளும் சிகிச்சை சார் நடவடிக்கைகளும் அரசால் பன்மடங்கு அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான வளங்களை மிகப்பெரும் செல்வந்தர்களிடம் இருந்து வரவேண்டிய வரிகளை சரியாக வசூல் செய்வதன் மூலமும், அவர்கள் மீது மத்திய அரசு செல்வ வரி, வாரிசுரிமை வரி  போன்றவற்றை கூடுதலாக  விதிப்பதன் மூலமும் சேகரிக்க முடியும். 

3. அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக தொடக்க நிலை மற்றும் அடுத்த நிலை பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.  பொது சுகாதார அமைப்புக்கான முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

4. மருத்துவத்துறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இத்துறையில் ஒப்பந்தமுறை, தொகுப்பூதிய முறையை ரத்து செய்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். உயிர்காக்கும் இத்துறைக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள், மருத்துவ கருவிகள், கட்டமைப்பு வசதிகளை உயர்த்திட கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும்.

5. ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் 2011-12 கணக்கு படி 11,500 பேருக்கு ஒன்று என இருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 5,000க்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில்  உருவாக்குவதும், மருத்துவர் மற்றும் ஊழியர்களை உத்தரவாதப் படுத்துவதும் அவசியம். 

6. மருத்துவ சேவையில் அதிகார பரவல் உறுதிசெய்யப்படவேண்டும். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த பிரிவினருக்கு மருத்துவ காப்பீடு மிகவும் ஆதாரமானது. அதனை மேம்படுத்த வேண்டும்

7. களப்பணியாளர்களின் உடல் நல பாதுகாப்பினை திட்டமிட்டு உறுதிப்படுத்து வது  மிகவும் முக்கியமானது. பேரிடரை எதிர்கொண்டு களப்பணியில் கடுமையான உழைப்பை நல்கும் ஆஷா திட்டப்பணி ஊழியர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும். 

8. பள்ளிகள் தொடர்ந்து செயல்படாத காரணத் தால் சுமார் 65 லட்சம் குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படும் நிலைமை உள்ளது. பொது முடக்க  விதிகளுக்கு உட்பட்டு,  சமைத்தஉணவினை குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. பள்ளிகள், கல்லூரிகள் திறந்து செயல்படுவது, இன்னும் சில மாதங்களுக்கு கடினமாகவே இருக்கும். எனவே காலாண்டு தேர்வு நடைபெறும் செப்டம்பர் வரையிலான வகுப்புகளை, தொலைக்காட்சி மூலம் நேரம்தீர்மானித்து, நடத்துவது. அரசு தொலைக் காட்சியை அதற்கு பயன்படுத்துவது, தனியார் பள்ளிகள் இந்த மூன்று மாத காலத்திற்கு கட்டணம் வசூலிப்பதை முற்றாகதடுப்பது. கிராமங்களில், குடியிருப்புகளில் இருக்கும் ஆசிரியர் விவரங்களை கணக்கெடுத்து அவரவர் குடியிருப்பில் குழந்தைகள் படிப்பதை கண்காணிப்பது மற்றும் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

10. அரசு கட்டிடங்கள், அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் அனைத்தையும் இக்காலத்தில் மராமத்து செய்ய தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை பயன்படுத்துவது, நகரங்களிலும், மாநகரங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது போன்றவை செய்யப்படவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;