tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

உலகத்தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது

 நாட்டிலேயே முதன்முறையாக 1923- ஆம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தை கொண்டாடிய 100- வது ஆண்டு நிறைவுப்பெறுகிறது. 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய இம் மே தினத்தில் சூளுரைப்போம்.

 எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்கவும், கார்ப்பரேட் கொள்ளையரிடமிருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும் சாதி மதவெறி சக்திகளை வீழ்த்திடவும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கண்ணின் மணிப்போல் காத்திடவும், பாலியல் வன்முறையை தடுத்து பாலின சமத்துவ நிலையை காத்திடவும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களுக்கு முடிவு கட்டவும் அயர்வின்றி போராட இந்த மே தினம் நமக்கு ஆற்றல் அளிக்கிறது.

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு அனைத்துப் பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்குகிறது. நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் களவாட கதவு திறக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் விருப்பத்திற்கு ஏற்பச் சிதைக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற இந்திய மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மறுக்கிறது. மறுபுறத்தில் மக்கள் ஒற்றுமையைச் சிதைத்து சாதி மதவெறி சக்திகள் கோரத்தாண்டவமாட வழிவகுக்கிறது. இந்த இரட்டை அபாயங்களை தடுத்திட பலமுனைப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

நாடு விடுதலைப்பெற்றப் பிறகு உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனநயாக கூட்டாட்சி அடித்தளம் கொண்ட அரசியல் சட்டத்தை தகர்க்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. மாநில உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் வெட்டிச் சுருக்கப்படுகிறது. அனைத்து ஜனநாயக உரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது. மோடி அரசு அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளோடு சேர்ந்துகொண்டு எந்த அளவிற்ககு கூட்டுக் களவாணித் தனத்தில் ஈடுபடுகிறது என்பதற்கு ஹிண்டன் ஃபெர்க் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் ஆதாரமாய் அமைந்துள்ளன. எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை அதானிக்கு மோடி கைமாற்றிவிட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. விமானத்துறை, இரயில்வே, துறைமுகம் மற்றும் தொலைத்தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைத்துறைகள் அனைத்தும் ஒருசில முதலாளிகளின் கொள்ளை லாப வெறிக்கு பலியாடுகளாக மாற்றப்படுகின்றன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்ப பட்ஜெட்டில் பாதாளமளவு பள்ளம் விழுகிறது.

வேலை என்ற கோடான கோடி இளைஞர்களின் கனவு கருவிலேயே கருக்கப்படுகிறது. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு உயிர் நீர் ஊற்றும் நூறு நாள் வேலை திட்டத்திற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.

மே தின வரலாற்றில் பெண்களின் போராட்டம் மகத்தானது. ஆனால் இந்தியாவில் பெண்களின் உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுவதோடு, பாலியல் கொடுமைகளால் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மறுபுறத்தில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து தீயின் தீவிரத்தோடு போராடி வருகின்றனர். புதுடில்லியில் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற தொழிலாளர், விவசாயிகள் பேரணி ஆளும் வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். இதேபோன்று இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களை வளர்தெடுப்பதன் மூலமே தேசத்தை சரியான திசையில் வழிநடத்த முடியும்.

அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம். சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமைப்பாட்டை வளர்த்தெடுப்போம். தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க தொய்வின்றி போராடுவோம். மாநில உரிமைகளை, கூட்டாட்சியைப் பாதுகாப்போம், இந்தியாவில் பன்முக பண்பாட்டை உறுதிசெய்வோம். பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம். நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப்பிடித்த மே தின கொடியைக் கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

;