சென்னை, மே 21 - சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் சங்கர சுப்பிரமணியன். இவர் எம்ஜிஆர் நகர் இந்தியன் வங்கியில் சுமார் 8 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு பிணையமாக தனது வீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை வங்கியில் கொடுத்தார். பின்னர் கடனை வட்டியுடன் செலுத்தி முடித்துள்ளார். வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்காமல் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சங்கர சுப்பிரமணியன் அதே வங்கியில் அடமான கடன் வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த வங்கியின் மேலாளராக இருந்த ரவீந்தரன்சாமுவேல், 62 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கடன் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால், வங்கியில் உள்ள தனது பத்திரத்தை தரும்படி சங்கர சுப்ரமணியன் கேட்டுள்ளார். அதற்கு ரவீந்திரன் சாமுவேல் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதற்கிடையில் ரவீந்தரன் சாமுவேல், கெல்லிஸில் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவரிடம் பத்திரத்தை கேட்டதற்கு 7 ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்தால் தருவதாக கூறியுள்ளார். இதனை செல்போனில் பதிவு செய்த சங்கர சுப்பிரமணியன், சிபிஐ அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சங்கர சுப்பிரமணியனிடம் 7 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ரவீந்தரனிடம் லஞ்சமாக கொடுக்க கூறியுள்ளனர். பணத்தை ரவீந்தரன் வாங்கும் போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.