tamilnadu

img

100 நாள் தொழிலாளர்களுக்கு ஊதியப் பாக்கியை உடனே வழங்கிடுக.... அரசு முதன்மை செயலாளரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்...

சென்னை:
பல மாதங்களாக வேலை செய்து காத்திருக்கும் ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கான ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அரசு முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, கூடுதல் செயலாளர் சத்தியவதி, இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு, மாநிலச்செயலாளர் ஏ.பழநிசாமி, மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர்  சந்தித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 100 நாள் வேலை சட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. கொரோனா நோய் பரவல் காலத்தில் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கிராமப்புற பண பரிவர்த்தனையில், நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலிப்பணம் சுமார் ரூ.300 கோடி வரை வழங்கப்படுவது, கிராமப்புற பொருளாதார பரிவர்த்தனைக்கு பேருதவியாக இருக்க வேண்டிய காலத்தில் கூலி பணம் தராமல் இருப்பது எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. இதர பகுதி மக்களின் தொழிலையும் பாதிக்கிறது.

அடுத்த சில நாட்களில் பொங்கல் தினம் வரவிருக்கும் சூழலில், 5 நாட்களுக்கும் மேல் கொண்டாடப்பட இருக்கும் திருவிழா நேரத்தில் ஊதியப் பாக்கி நிலுவையில் இருப்பது, இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்.மேலும்  எம்என்ஆர்ஜிஇஏ  சட்டமும் உச்சநீதிமன்றமும் செய்த வேலைக்கு 15 நாட்களில்கூலி தரப்பட வேண்டும் . அவ்வாறு கொடுக்கத்தவறும் நாட்களுக்கு வட்டி சேர்த்து ஊதியம் தரப்பட வேண்டும் என்று  வலியுறுத்து கிறது.ஆகவே, எளிய மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க உடனடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நிதியை பெற்று, உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை பொங்கல்பண்டிகைக்கு முன்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும். சுழற்சி முறையில் மாதத்திற்கு 6 நாட்கள் வேலை கொடுக்கும் பழைய நடைமுறையை தவிர்த்து தொடர்ந்து வேலையும் சட்டக்கூலியை முழுமையாக வழங்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;