tamilnadu

img

ஏரிக் கால்வாய்களை தூர்வாரக் கோரி உண்ணாநிலைப் போராட்டம்

திருவண்ணாமலை,மார்ச்.13-  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, ஏரிக் கால்வாய்களை தூர்வாரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. கீழ்பாலூர் தேரடி தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, கிளை நிர்வாகிகள் செந்தில், ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை  துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலாதன் உரையாற்றினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணி, பி.சுந்தர் தாலுக்கா செயலாளர் கே.கே. வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.  கலசபாக்கம் தாலுகாவில் கீழ் பாலூர், மேல் பாலூர் ஏரிகளுக்கு, மட்ட வெட்டு ஏரியின் உபரிநீர் வருகின்ற வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் உள்ளது. புதர்கள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது. இதனால், கீழ்பாலூர், மேல் பாலூர் ஏரிகளுக்கு  வர வேண்டிய நீர் வரத்து தடை பட்டுள்ளது.  இந்நிலையில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, நீர் ஆதாரத்தைப் பெருக்கி, குடிநீர் மற்றும் விவசாயத்தை பாது காக்க கோரிக்கை வைத்து  நிர்வாகிகள் பேசினர்.  இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில்  ஏரிக் கால்வாய்களை தூர் வாருவதாக உறுதியளித்ததை அடுத்து உண்ணாநிலைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.