tamilnadu

மனிதச் சங்கிலிப் போராட்டம்: சிபிஐ, மதிமுக, விசிக ஆதரவு

சென்னை, ஜூன் 8-ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின்  திட்டத்தைக் கண்டித்து  விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு சிபிஐ, மதிமுக, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான இயக்கம் சார்பில் ,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், இத்திட்டத்தினை மத்திய அரசு கைவிடக் கோரியும், ஜூன் மாதம் 12 ஆம் நாள் மாலை 5.30 மணி முதல் 6மணிவரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை  தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மதிமுக 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில். தமிழகத்தின் உயிராதாரமான வேளாண்மைத் தொழிலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, சொந்த மண்ணிலே விவசாயிகளை அலைய விடுவதற்கு பா.ஜ.க. அரசு தீட்டி உள்ள ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு கை கட்டி, வாய் பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி அளித்துவிட்டது.காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து, மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. வேளாண்மைத் தொழிலைக் காக்கும் வகையில் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் தீய நோக்கத்தோடு மத்தியில் ஆளும் மோடி அரசால் தொடங்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம்’ நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஹைட்ரோ கார்பன் திட்டங்களைப் புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் கூறியிருப்பது போலத் தமிழக முதலமைச்சரும் உறுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

;