tamilnadu

img

செப்.15-ல் மனிதச் சங்கிலி... அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்திடுக...

சென்னை:
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்பட அனைவரையும் விடுவிக்க கோரி செப்டம்பர் 15 ஆம் தேதியன்று  மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீமா கொரேகான் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசினால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் (UPPA) கீழ்கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப் பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி சிறையிலேயே மரணமடைந்தார்.  உபா சட்டத்தில்  கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, ஜோதி ரகோபா ஜக்தாப், சாகர் டாட்யாராம் கோர்கே,ரமேஷ் முரளிதர் கெய்சோர், சுதிர் தாவ்லே, சுரேந்திர கேட்லிங், மகேஷ் ராவுத், ஷோமா சென்,ரோனா வில்சன், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், வரவரராவ், வெரோன் கன்சால்வ்ஸ், கவுதம் நவ்லாகா, ஹனி பாபு ஆகிய 15 பேரும் இப்பொழுதும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி சிறையில் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.இதே போல் நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற முழக்கத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால்  ஒருங்கிணைக்கப்பட்டுள்ள”பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம்”  சார்பில் செப்டம்பர் 15 சர்வதேச ஜனநாயக தினத்தன்றுதமிழ்நாடு முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்த வுள்ளது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிட மக்கள் மத்தியில் பிரச்சாரங்களையும் நடத்தவுள்ளது.

ஜனநாயகத்தை முடக்கும் உபா போன்ற சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். பழிவாங்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட பொய்வழக்கை திரும்பப் பெற வேண்டும். சிறைப் படுத்தப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மார்க்சிய, அம்பேத்கரிய,பெரியாரிய, மனித உரிமை,பெண்ணுரிமை ஆகிய தளங்களில் பணியாற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஜனநாயக இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிற இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் கைகோர்த்திட வேண்டும்.அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தங்களது ஆதரவினை வழங்கிட வேண்டும் என்று கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

;