tamilnadu

img

ரூ.80 கோடி லஞ்சம் என அரசாணையில் குற்றம்சாட்டியும் துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசுஅவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம்என்ன? என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நவம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களைவிசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தத் துணைவேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்தபுகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அதிமுக அரசு?இந்த 9 மாதங்கள் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும், இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை இடைக்காலப் பணி நீக்கம் செய்து, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதிமுக அரசு, 80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்து விட்டார்கள் என்று அரசாணையில் குற்றம்சாட்டியும், இதுநாள் வரை துணைவேந்தரையும், துணைஇயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம்நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுப்பியுள்ளது.கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, திமுக ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதல்வர்எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமின்றி, ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.