சென்னை, ஜூன் 7- கொரோனா தொற்று அதிகம் உள்ள வட சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 12 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டது. சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பில் வட சென்னையில் மட்டும் 50 விழுக்காடு பேர் உள்ளனர். உயிரிழநதவர்களில் 120 பேர் வடசென்னை பகுதியயை சேர்ந்தவர்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், மாதவரம் ஆகிய 6 மண்டலங்கள் வடசென்னையில் உள்ளன. இதில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் பாதிப்பு குறையாததால் வட சென்னையை அடைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.