tamilnadu

img

பட்ஜெட்டில் ஊரக வேலைத்திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்குக..... விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை....

சென்னை:
மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அகில இந்தியவிவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் ,  மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் மாறி வரும் பருவநிலை மாற்றங்களாலும்  ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறை விவசாயத் துறையாகும். மத்திய அரசு மேற்கொண்டு வரும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விவசாயத்துறையை சீரழிவு பாதையைநோக்கித் தள்ளும் நடவடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட நடப்புஆண்டில் 9 சதவீதம் குறைத்திருப்பது மிகப்பெரிய அளவிற்குவிவசாயத்திற்கும் - விவசாயிகளுக்கும்  நெருக்கடியை உருவாக்கும். விவசாயத் துறையில்ஏற்படும் பாதிப்புகள் இரட்டைத்தாக்குதலாக நாடு முழுவதும் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் பாதிக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். 

கிராம மக்களை பட்டினிச்சாவுக்கு தள்ளும் நிலை
மேலும் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைத்திட்டத்தில் கடந்த ஆண்டு திருத்திய பட்ஜெட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகும். ஆனால் தற்போது ரூ.38,500 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற உழைப்பாளர்களை மிகக் கடுமையாக வஞ்சிக்கும் செயலாகும். இந்தியஉணவுக் கழகத்தின் கடனுக்கு முற்றுப்புள்ளி வைத்திட போதியதொகையை வழங்கிட மறுத்துள்ளது. இதனால் பொதுவிநியோகம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் உயிர்வாழத் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளும் பேராபத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.மத்திய பட்ஜெட்டின் அனைத்து அம்சங்களும் வேலையின்மை, உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, புதிய வேளாண் சட்டங்களை அமலாக்குவதற்கான முனைப்பு, ஏழைகள் மீது சுமையை ஏற்றிகார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வாரி வழங்குவது என்ற நிலையை உருவாக்குவதையே காட்டுகிறது. மத்திய அரசின் இந்தமக்கள் விரோத பட்ஜெட்டை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பிப்.10-ல் போராட்டம் 
மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டைக் கண்டித்தும், பட்ஜெட்டில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களை நீக்கி - விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக வேளாண்மைத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும்  மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைத் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும்,பிப்ரவரி 10 அன்று நடைபெறும்தேசம் தழுவிய இயக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களைத் திரட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;