tamilnadu

img

மின்வாரியத்தில் 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்புக.... கேங்மேன்களுக்கு பணியாணை வழங்கிடுக..... ஜன.29ல் சென்னை கோட்டையை நோக்கி வாலிபர் சங்கம் பேரணி....

சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை  நிரப்ப வேண்டும். கேங்மேன்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணியாணை  வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 29 அன்று  சென்னை கோட்டை நோக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் ஜனவரி 5 அன்று திருச்சியில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலபொருளாளர் தீபா மற்றும் மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழுஉறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்கம்
இந்திய உணவுச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை வைத்து தலைநகர் தில்லியிலும், இந்திய நாடு முழுவதிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 23 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 150-வது பிறந்த நாளையொட்டி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்  இருசக்கர வாகன பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தேர்வான கேங்மேன்களுக்கு பணி ஆணை வழங்கிடுக!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் சொற்ப இடங்களை உள்முகத் தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் பூர்த்தி செய்துவிட்டு 60 சதவீத காலி பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.இந்நிலையில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 14 ஆயிரத்து 949 பேர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஆறுமாத காலமாக பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.

 கடந்த 2020 மார்ச் மாதம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சார துறை அமைச்சர், கேங்மேன் பணிகளில்ஏற்கனவே அறிவித்த 5 ஆயிரம் பணியிடங்களுடன் கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம்கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.ஆனால் இன்றுவரை இப்பணியிடங்களுக்கு தேர்வுபெற்ற வர்களுக்கு தமிழக அரசு பணி ஆணை வழங்கவில்லை. 

தமிழக அரசுக்கு கண்டனம்
தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தால் தான் கேங்மேன் பணியிடங்களை நிரப்பாததற்கான காரணம் என்று தமிழக அரசு திசை திருப்புவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கேங்மேன் பணியிடங்களை நிரப்பிட நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தொழிற்சங்கங்களும் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேபணையில்லை என மின்வாரிய தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, தமிழக அரசு கேங்மேன் பணிக்கு தேர்வுபெற்றவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை  நிரப்பிட  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் மின்வாரிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 29 அன்று சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. 

அம்மா மினி கிளினிக்குகளுக்கு நிரந்தரப் பணியாளர்களை நியமித்திடுக! 
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலையில் தமிழக அரசு புதிதாக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை திறந்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.  2015ஆம் ஆண்டு 14 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தரப்பட்ட வாக்குறுதியை அரசு காற்றில் பறக்கவிட்டது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளில், ஏற்கனவே தமிழக ஆரம்ப  சுகாதார நிலையங்களில் இருந்து ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என்கின்ற முறையில் காலையில் 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பணிசெய்ய மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய மாறுதல்களால் ஏற்கனவே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு மேலும் பணிச்சுமையை அரசு திணித்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ சிகிச்சை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.எந்தவித அடிப்படை வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லாமல் அவசரகதியில் பழைய கட்டிடங்களுக்கு  பெயிண்ட் அடித்து அம்மா மினி கிளினிக்குகள் இயங்கி வருகின்றன. எனவே அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அம்மா மினி கிளினிக் வரை அனைத்து பணியிடங்களையும் நிரந்தரப் பணியிடங்களாக தமிழக அரசு நிரப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;