சென்னை:
மின்சார வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நவம்பர் 19 அன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச்செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில்சொற்ப இடங்களை உள்முகத் தேர்வுமற்றும் நேரடி தேர்வு மூலம் பூர்த்தி செய்துவிட்டு 60 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 14,949 பேர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஆறுமாத காலமாக பணி நியமனத்துக்காக காத்துக்கொண்டுள்ளனர். கடந்த 2020 மார்ச் மாதம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சார துறை அமைச்சர் கேங்மேன் பணிகளில் ஏற்கனவே இருக்கக்கூடிய 5,000 பணியாளர்களுடன் கூடுதலாக 5,000 பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். ஆனால் இன்றுவரை ஒன்றைக்கூட தமிழக அரசு நிரப்பிடவில்லை.மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் புதிய பதவிகளை உருவாக்கிக்கொண்டே செல்வதுசட்டத்திற்கு மாறானதும் வேலைவாய்ப்புகளை நீர்த்துப்போகச் செய்வதுமாகும். இதுபோன்ற செயல்பாடுகள் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியே. கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர்கூறுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயம் ஆகாது என உறுதியளித்தார். ஆனால் அன்று மாலையே தமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரியில் உள்ள govt (அரசு) என்ற வார்த்தையை நீக்கிவிட்டு புதிய இணையதள முகவரி மாற்றப்பட்டதற்கான அரசாணை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளியிடப்பட்டது. இந்த செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனே இவ்வாணையை திரும்பப்பெற வேண்டும், 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்சாரவாரியத்தில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார்மயம் ஆக்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் நவம்பர் 19 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.