tamilnadu

img

பொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....

சென்னை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஜனவரி 26 அன்று  பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறையினரின் தடையை மீறி டிராக்டர் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும்  பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி, திமுகவைச்சேர்ந்த பாரதி, துரை, உட்பட 5 பேரை விடியற்காலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளது. கொலை முயற்சி உட்பட பிணையில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு புனைந்து அடக்கு முறையை ஏவி சிறையிலடைத்துள்ளது. தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக காவல்துறை விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மற்றும் கூட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து பாரபட்சமாக நடந்து கொள்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் திருவாரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன், விவசாயிகள் போராட்டத்தையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. காவல்துறையினரின் அடக்குமுறை, அராஜகம், பொய்வழக்கு ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

;