tamilnadu

இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே... 1 ஆம் பக்கத் தொடர்ச்சி

மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மின்துறைஇருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

அம்பானி,அதானியை வாழவைக்க...
ஆனால், மத்திய மோடி அரசு அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளை வாழவைப்பதற்காக கேந்திரமான சேவைத் துறையான மின்துறையை தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு ஏழைகளுக்கு வேட்டுவைக்க மின்சார  சட்டத் திருத்த மசோதாவைஅமலாக்கத் துடிக்கிறது.இந்த புதிய மின்சார திருத்தச் சட்டத்தில்புதுப்பிக்கத்தக்க தேசிய எரிசக்தி கொள்கையை மத்திய அரசே வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாக பறிக்கும் செயல் மட்டுமல்லாமல் அரசியல் அமைப்புச் சட்டத்திற் கும் எதிரானதாகும். இச்சட்டத் திருத்தம் மாநிலங்களின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். தொழில்கள் மற்றும் விவசாயம் நலிந்துவேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்படும்.மின்சாரச் சட்டம்   2003 இன் படி அமைக்கப்பட்ட மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வரும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய ஒழுங்குமுறை ஆணையமேதேர்வு செய்யும்.மின் கட்டண நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். இதனால், மாநில மக்களின் தேவையை மாநிலஅரசுகள் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். மின் விநியோகத்தில் தனியாரை ஈடுபடுத்துவது நாட்டிற்கு அழிவை உண்டாக் கும். 

மீண்டும் அரிக்கேன் விளக்குகள் காலமா?
அதைப்போன்று தனியார் பெருமுதலாளிகள் மின் வினியோகத்தில் நகர்ப்புறத்தை மட்டுமே தேர்வு செய்வார்கள். கிராமங்களை தேர்வு செய்ய மாட்டார்கள். இதனால் கிராமங்களில் மீண்டும் அரிக்கேன் விளக்குகளுக்கு திரும்புகின்ற அபாயம் ஏற்படும். கொரோனா தொற்றின் காரணமாக நாட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாடுவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச்செல்ல இயலாமல் பல்வேறு இன்னல்களைஎதிர்கொள்வது, தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வது என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருக்கிற மக்களிடம் இதை வாய்ப்பாகபயன் படுத்தி எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற வகையில் இந்த மின்சாரசட்டத் திருத் தத்தை கொண்டு வருவதற்குமத்திய பாஜக அரசு துடிக்கிறது.

முதலாளிகளின் நலனுக்கான நிதி ஒதுக்கீடு
20 லட்சம் கோடி ரூபாய் குறித்து ஐந்து நாட்களாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சார வாரியங்களுக்கு 90,000 கோடிரூபாய் ஒதுக்கப்படுவதாகக் கூறினார். இந்தபணத்தை மின் வாரியங்கள் தனியாரிடமிருந்து பெற்ற மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளுக்காக மட்டுமேபயன்படுத்த வேண்டுமே தவிர வேறு எதற்கும்செலவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்காகவோ அல்லது மின் திட்டங்களின் கட்டுமானப் பணிகளுக்காகவோ அல்லது ஊழியர்களின் நலன்களுக்காகவோ நிதி ஒதுக்காமல், மின்சார வாரியங்கள் எவ்வளவு நட்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை, தனியார் முதலாளிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில்தான் அந்தநிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.நேற்று  மின்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, டிஸ்காம் நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அளவுகளை ஒருகுறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவதை  மின்துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகத்தான் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசு யாருக்கான அரசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிச்சத்திற்கு வருகிறது.இந்த மின்சார சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, மத்திய அரசு எக்காரணம் கொண்டும் மக்களைப் பாதிக்கும் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா- 2020ஐ நிறைவேற்றக் கூடாது எனவும் அதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், எந்தச் சூழ்நிலையிலும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது எனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;