tamilnadu

கோவில்களை மூடிவிடலாமே? நீதிபதிகள் ஆவேசம்

சென்னை, ஏப்.24- கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில், ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான மயில் சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள் இவ்வாறு கூறியிருக்கின்றனர்.சிலை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டிலிருந்து, கடந்த 50 ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், தொல்லியல் துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான நிதி ஒதுக்குவது பற்றிய உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என, நீதிமன்றத்தில் ஆஜராகி, பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.இதுதொடர்பாக ஒரு வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

;