tamilnadu

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி ஜூன் 11 டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூன் 8-  காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி உடனடியாக கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி ஜுன் 11 அன்று டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஜூன் 7 வெள்ளியன்று  தாம்பரம் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, அதன் மீது உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு என பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கிறது. கடந்த மே மாதம் 28 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடி தமிழகத்திற்கு ஜுன் மாதம் 9.2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆணையத்தின் முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது. இது சட்டவிரோமானதும், வன்மையான கண்டனத்திற்குரியதும் ஆகும். எனவே, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி உடனடியாக கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும். தமிழக அரசு, ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். ஆணையம் தனது முடிவை செயல்முறைக்கு கொண்டு வரும் வகையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜுன் 11 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

;