tamilnadu

img

மனோகர் தேவதாசின் மறைவு கலை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு - தமுஎகச மாநிலக்குழு அஞ்சலி

மனோகர் தேவதாசின் மறைவு கலை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு . அவரது மறைவிற்கு தமுஎகச அஞ்சலி செலுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவண் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

புகழ்பெற்ற ஓவியரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (83) உடல்நலக் குறைவால் சென்னையில் 07.12.2022 அன்று உயிரிழந்தார்.

மதுரையில் பிறந்த மனோகர் ஓவியர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவர் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதன மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதனக் கட்டங்கள் ஆகியவற்றை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

மதுரையில் 1936 ஆம் ஆண்டில் பிறந்த மனோகர், அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். சென்னையில் 1956ஆம் ஆண்டில் குடியேறி, தன் படிப்பு சார்ந்த தொழிலில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதே, கோடுகளாலான சித்திரம் வரைவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதுவும் கட்டிடங்கள், கோயில்கள், சிற்பங்கள் போன்ற கட்டமைப்புகளை வரைவதில் தனக்குள் ஆழமான தாக்கம் இருப்பதை உணர்ந்தார்.

சிறுவயதில் ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்சனையால் இவருக்குக் கண் பார்வைத்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. கடந்த ஓராண்டிற்கு முன் முழுமையாகப் பார்வையை இவர் இழந்தார்.

பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரியக் கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை உருவாக்கினார். கண் பார்வை மங்கிய நிலையிலும், பென்சில் ஸ்கெட்ச்கூட போடாமல் அப்படியே பேனாவால் வரையும் திறன் கொண்டிருந்தார்.

புகழ்பெற்ற கோட்டோவியரான மனோகர் தேவதாஸ் தனது ஓவியங்களுக்காகப் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது மனைவி மஹிமாவும் சிறந்த ஓவியர். ஆனால், அவருக்கும் ஏற்பட்ட கடுமையான விபத்தின் காரணமாகத் தொண்டைக்குக் கீழுள்ள உடற்பகுதிகள் செயலிழந்தன. எனினும் இருவரும் விடாது தமது கலைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அளிக்கப்பட்ட வாழ்வை ஏற்றுக்கொள்ளும் மன வலிமையோடு, அகவிழியால் தாம் கண்டதை கலை உணர்வோடு இருவரும் எழுத்திலும், படங்களிலும் வடித்தனர். மதுரையின் கோயில் பகுதிகள், ஆட்சியர் அலுவலகம் போன்ற பல கட்டிடங்கள், புது மண்டபத்துச் சிற்பங்கள் இவரது கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று கருப்பு - வெள்ளை சித்திரங்களாக மிளிர்ந்தன. ஆனைமலையும், மற்ற இயற்கைத் தோற்றங்களும் இவர் பார்வையில் இருந்து தப்பவில்லை. மொத்தத்தில் மதுரையே இவரால் கோடுகளில் அழகாகச் சித்தரிக்கப்பட்டது.

மனோகர் தேவதாஸ் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். மனோகரின் முதல் ஆங்கில நூலான ‘கிரீன் வெல் இயர்ஸ்’, சுயசரிதையாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக, அவர் தன் மனதைப் பறிகொடுத்த மதுரை நகர் பற்றியதாகவே இருந்தது. அதில் மதுரையின் நிகழ்வுகள், சித்திரைத் திருவிழா போன்றவற்றை தமது சொந்த அனுபவங்களுடன் விவரித்திருந்தார். அடுத்த நூல் ‘கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள்’. இது மஹிமாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனையப்பட்டது. அவரது மூன்றாவது நூல் ‘தைரியத்துக்கு ஒரு கவிதை’, முற்றிலும் மஹிமாவின் வாழ்க்கைப் பாதை. அவரது மதுரையின் பன்முகங்கள் நூல் மதுரையைக் கோட்டுச்சித்திரங்களாக்கிய ரசவாதத்தை நிகழ்த்தியிருந்தது.

ஓவியர் மனோகர் தேவதாசின் மறைவு கலை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே.

ஓவியர் மனோகர் தேவதாசுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;