tamilnadu

img

மீனவர்களுக்கு ரூ.5000.... முதலமைச்சர் உத்தரவு.....

சென்னை:
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடல் மீன் வளத்தை பேணிக் காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக்கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கா லம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகளில் மீன் பிடிப்பு செய்யும் பணி யாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலும் தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பாண்டில் 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 1லட்சத்து 46 ஆயிரத்து 598 பயனாளிகள், மேற்கு கடற்கரை பகுதி கன்னியாகுமரியை சேர்ந்த 20 ஆயிரத்து 402 பயனாளிகள் என்று ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 72 ஆயிரம் பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்காக 86 கோடி ரூபாயை நிதி வழங்கி முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை மீனவர்களின் வங்கிக்  கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;