tamilnadu

சென்னை, தேனி முக்கிய செய்திகள்

பொறியாளர்கள் அமைப்பின் தொழில்நுட்ப மாநாடு
சென்னை, ஆக.25 இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் சென்னை கிளை தனது 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தொழில் நுட்ப மாநாட்டை நடத்தியது.  சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் தொழில் நுட்ப வல்லுநரகள் மாணவர்கள், தொழிற்சாலை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் தலைவர் ராமதாஸ் நாட்டின் வளர்ச்சியில் பொறியாளர்களின் முக்கிய பங்கு பற்றி பேசினார். மாநாட்டு அமைப்பாளர் எல்.ரமேஷ் பல்வேறு தொழில் துறையில் புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு பற்றி பேசினார். மாநாட்டில் 250 மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விழாவில் இன்பாண்ட் நிர்வாக இயக்குனர் எஸ். ராஜசேகரன், பேசுகையில் "தொழில் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக தொழில்துறை 4.0, இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு ஆகியவை எதிர்கால பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். பேராசிரியர் வேல்ராஜ், அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் தலைவர் குணராஜா, அமைப்புச் செயலர் டி குமார், செயலர் கோமதி நாயகம் ஆகியோர் இதில் பேசினர்.

போடியில் வட்டாட்சியரை தாக்கி கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகர் கைது
தேனி , ஆக. 25- போடி வட்டாட்சியராக இருப்பவர் மணிமாறன் (48). போடி சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் இறைச்சி கடை செயல்பட்டு வருவதாக புகார் வந்ததாலும், போடி பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பதற்காகவும் போடி நகர அளவையர் முத்துமாரி மற்றும் அதிகாரிகளுடன் சென்று வட்டாட்சியர் மணிமாறன் அளவீட்டு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு இறைச்சி கடை வைத்துள்ள சிதம்பரத்தேவர் மகன் பரமசிவம் (50) மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத இரண்டு பேர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுடன், அளவீடு செய்யக் கூடாது என தகராறு செய்து, வட்டாட்சியரை தள்ளிவிட்டு அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பெண் அளவையர் முத்துமாரியுடனும் தகராறு செய்துள்ளனர்.     இதுகுறித்து வட்டாட்சியர் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் பரமசிவம் மற்றும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற இருவர் குறித்து விசாரித்து வருகின்றனர். பரமசிவம் போடி நகராட்சி 22 ஆவது வார்டு பாஜக கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.