செங்கல்பட்டு: 33 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 258 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது 622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 16 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே 316 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 16 நபர்கள் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 332 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 183 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 40 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 825ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 470 பேர் குணமடைந்துள்ளனர். 10 பேர் உயிரிழந்தனர். 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அஞ்சலக ஊழியருக்கு கொரோனா
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 59 வயது நபர், வில்லிவாக்கம் தபால் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அடுத்த 2 நாட்கள் விடுமுறை இருந்ததால், செவ்வாய்கிழமை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தபால் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து அலுவலகத்தை மூடினர். இதனால் தபால் அனுப்ப வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் 48 மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் அலுவலகம் செயல்படலாம் என்றும், அங்கு பணி யாற்றும் மற்ற 27 ஊழியர்களுக்கு ‘ஜிங்க்’ மாத்திரைகள் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் அந்த தபால் நிலையத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தங்களுக்கு 4 நாட்கள் விடுப்பு வேண்டும் கோரி தபால் துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா சிகிச்சையில் 3 பேர் உயிரிழப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் (கேஎம்சி) கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுரவாயலைச் சேர்ந்த 41 வயது நபரும், சூளைமேட்டை சேர்ந்த 56 வயது நபரும் உயிரிழந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 வயது நபர் உயிரிழந்தார்.