தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.