tamilnadu

img

மதமோதலை உருவாக்க முயற்சிக்கும் பாஜக எச். ராஜாவின் அவதூறு பேச்சு.... மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்....

சென்னை:
மதமோதலை உருவாக்க முயற்சிக்கும் வகையில் பாஜகவின் எச். ராஜா அவதூறாக பேசுவதற்கு தமிழகமக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச். ராஜா சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக நிதி அமைச்சர்  பிடிஆர் தியாகராஜன் அவர்களுக்கு பதில் அளிப்பதாக கூறி சத்குருவிற்கு வக்காலத்து வாங்கி பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டியில் எவ்வித தொடர்பும் இல்லாமல் ஜெயிலர் ஜெயப்பிரகாசை கொன்றவர் அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த தற்போது பாபநாசம் எம்எல்ஏ ஆக உள்ளவர் என்றும், இந்த ஜெயப்பிரகாஷ்  பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்தி கேயனின் தந்தை என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

எச். ராஜாவின் இந்தக் கூற்றில் எள்ளளவும் உண்மை இல்லை. முதலில்   ஜெயிலர் ஜெயப்பிரகாஷின் கொலைக்கும் தற்போது பாபநாசம் எம்எல்ஏவாக உள்ள பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஜெயப்பிரகாஷ் கொலை சம்பந்தமாக இதுவரை எந்த வழக்கும் அவர் மீது பதியப்படவில்லை. அதேபோல் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயப்பிரகாஷ் அல்ல. அவர் பெயர் தாஸ் என்பதாகும். ஜெயப்பிரகாசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் தமிழ்நாட்டில் மக்கள் ஒற்றுமையை கெடுத்து மத ரீதியான மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயிலர் ஜெயப்பிரகாசை கொன்றது பாபநாசம் எம்எல்ஏ என்றும் இந்த  ஜெயப்பிரகாஷ் பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை என்றும் மிகவும் பொய்யான தகவலை தனது பேட்டியில் கூறியுள்ளார் எச். ராஜா. 

எச்.ராஜாவின் இந்த பேச்சு மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. எவ்வித ஆதாரமுமில்லாமல் வேண்டு மென்றே ஒரு உள்நோக்கத்துடன் தமிழ்நாட்டில் ஒரு மத ரீதியான மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூறியுள்ள அவரது பேட்டி குறித்து தமிழக அரசு புலன் விசாரணை செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை மட்டுமே தனது பேட்டியில் கூறிவரும் எச்.ராஜாவின் நடவடிக்கைகளை தமிழக மக்கள்அனைவரும் கண்டிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம். சென்ற காலங்களில் பலமுறைஇவ்வாறு தடாலடியான அவதூறு பேச்சுக்களை கூறுவதும் பின்னர் அதை மறுத்து மன்னிப்பு கேட்பதும் இவரது வாடிக்கை என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். எனவே உள்நோக்கத்துடன் ஒரு மதரீதியான மோதலை உருவாக்க வேண்டுமென்ற காரணத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் எச். ராஜா மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;