tamilnadu

img

சமையல் கேஸ் விலையை உயர்த்தி மக்களைத் தாக்கும் ஒன்றிய பாஜக அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...

சென்னை:
கொரோனா காலத்திலும் ஒன்றிய பாஜகஅரசு மக்கள் மீது விலை உயர்வு சுமையை ஏற்றியுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலையை  ஏழு மாதத்தில் 240 ரூபாய் என கிடுகிடுவென உயர்த்தி மக்களைத் தாக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ.வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக, பெட்ரோல், டீசல்மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுசெய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாகவும் - ஒன்றிய அரசின் வரிவிதிப்பு கொள்கை காரணமாகவும் சமீப காலமாக பெட்ரோல், டீசல்விலை உயர்ந்து 1 லிட்டர் ரூ.100- ஐ தாண்டிச்சென்றுள்ளது.

கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாத சூழலிலும் வாழ்வாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் சமையல் கேஸ் ஒரு சிலிண்டருக்கான விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. உண்மையில் கடந்த 7 மாதங்களில் ரூ.240-உயர்ந்து, தற்போதைய உயர்வும் சேர்ந்தால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.850.50- ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு சிலிண்டர் விலைரூ.406-. இந்த 5 ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர்விலை ரூ.850.50- எனில் விலை உயர்வு 110 சதவீதம். 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் சிலிண்டருக்கான மானியம் ரூ.243- அந்தமானியத்தொகையும் படிப்படியாக நிறுத்தப் பட்டு விட்டது. மேலும் 18 சதம் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை.

சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பதோடு மானியத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.பெட்ரோல்-டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்விலை உயர்வு என தொடர்ந்து மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் - விலையுயர்வை கைவிடக் கோரியும் - மானியத்தை அதிகரிக்கக் கோரியும் கண்டனக்குரல்கள் முழங்கட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகசக்திகளை  அறைகூவி அழைக்கிறது.

                                   *****************

பெண்ணையாற்றில் புதிய அணை....  உரிய நடவடிக்கை எடுத்திடுக!

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தியும் - முந்தைய அதிமுக அரசின் செயலற்றத் தன்மை காரணமாகவும், கர்நாடக பாஜக அரசுபெண்ணையாற்றில் 430 மீட்டர் நீளம் 50 மீட்டர் உயரத்திற்கு புதிய அணை கட்டியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே தமிழக அரசு 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் காரணமாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஒரு குழு அமைக் கப்பட்டு - 2020 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூட்டம்நடந்துள்ளது. அதன் பின் நடைபெற வேண்டிய கூட்டமும் நடக்கவில்லை. அதிமுக அரசும் தொடர்நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கை ஏதும்இல்லாத நிலையில் கர்நாடக அரசு வேகவேகமாக பெண்ணையாற்றில் தடுப்பணை மதகுகள் கூடஇல்லாமல் கட்டி முடித்துள்ளனர். 50 மீட்டர் உயரத்திற்கு மேல் நீர்வழிந்தால் தான் வட தமிழகத்திற்கு நீர்வர இயலும். இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர். அணைக்கு தண்ணீர் வருவது என்பது கானல் நீரே. ஐந்து மாவட்டங்கள் முறையே கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் நீரின்றி விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.தமிழக அரசு உடனடியாக உண்மைதன்மைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

;