tamilnadu

img

“சமூக நீதிக்கான அறப்போர்’’ நூலை வெளியிட்டு என்.சங்கரய்யா பேச்சு...களப்போராளிகளுக்கு அடிப்படையான நூல்

சென்னை:
இந்தியாவின் மூதறிஞர்களின் ஒருவராக கருதப்பட வேண்டியவர் பி.எஸ்.கிருஷ்ணன். அவரது நூலை அனைத்து தரப்பினரும் ஆழ்ந்துபடிக்க வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா கேட்டுக் கொண்டார்.இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணனுடன், கல்வியாளர் வே.வசந்திதேவி நடத்திய உரையாடலின் தொகுப்பாக‘சமூக நீதிக்கான அறப்போர்’ எனும் நூலை சவுத்விஷன் புக்ஸ் பதிப்பித்துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (டிச.14) குரோம்
பேட்டையில் நடைபெற்றது.

நூலை வெளியிட்டு விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா பேசுகையில், “மண்டல் குழு அறிக்கை அமல்படுத்தப்பட்டபோது, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது மாநிலச் செயலாளராக இருந்தஏ.நல்லசிவனும், தாமும் குடியரசு தலைவரைசந்தித்து, தமிழகத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து இருக்க வலியுறுத்தினோம். தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மகத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளன” என்றார்.

“சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெரும்முயற்சி எடுத்து பி.எஸ்.கிருஷ்ணன் செயல்படுத்தினார். இந்தியாவின் 1960-1970 காலசரித்திரத்தை தனது பணி வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். அரசுத் தேர்வுகளுக்கு படிப்பவர்கள், பொதுவாழ்வில் அரசியலில் இருப்பவர்கள், சமூக ஊழியர்கள் ஆழ்ந்துபடிக்க வேண்டிய புத்தகம். களச் செயற்பாட்டாளர்களுக்கு இந்நூல் ஒரு அடிப்படையானபுத்தகம்” என்றும் சங்கரய்யா கூறினார்.

களப்போராளிகளின் ஆயுதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகையில், “ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாதுஓய்வு பெற்ற பிறகும் ஒரு சமூக நீதி போராளியாக வாழ்ந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை எழுப்பி போராடினாலும், அவற்றிற்கு சட்ட வடிவம் கொடுக்க,நுணுக்கங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப வார்த்தைகளை பயன்படுத்தி, அரசாங்கத்தில் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி செயல்
படுத்தினார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள பதங்களுக்கு விளக்கங்களை கேட்டுமத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது.அத்தகைய சட்ட நுணக்கமான வார்த்தைகளைஉருவாக்கிய பெருமை பி.எஸ்.கிருஷ்ணனையே சாரும்” என்று புகழ்ந்தார்.“உயர்குடியில் பிறந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வோடு தன்னை இணைத்து கொண்டவர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி உள்ள அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டார். சமூக ஒடுக்குமுறை மிகப்பெரிய அநீதி என்பதை அதிகாரியாக இருந்து இவ்வளவு செய்ய முடியுமா? என்று வியக்கும் அளவிற்கு பி.எஸ்.கிருஷ்ணன் பணியாற்றி உள்ளார். சமூக நீதிக்காக களத்தில்போராடுகிறவர்களுக்கு ஆயுதமாக இந்நூல் இருக்கும்” என்றும் கூறினார்.

சிந்தனையும், எழுத்தும்..
“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின்உரிமைக்காக தொடர்ந்து போராடியவர் பி.எஸ்.கிருஷ்ணன். வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவரும் அவர்தான். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதிலும் முக்கியபங்காற்றினார். எந்த துறையில் பணியாற்றினாலும் அவரது எண்ணமும், சிந்தனையும், எழுத்தும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை சார்ந்தே இருந்தது” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரவத் தலைவர் பி.சம்பத் கூறினார்.

வார்த்தைகளை செதுக்கியவர்
முனைவர் வே.வசந்திதேவி பேசுகையில், “எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவுகளில் வந்துள்ள சட்டங்களில் பெரும்பாலானவை பி.எஸ்.கிருஷ்ணனின் கனவு, கரங்களில் இருந்து உருவானவை. ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது என்பதற்காக அலுவல் மொழியில் வார்த்தைகளை செதுக்கி செதுக்கி அந்தச் சட்டங்களை உருவாக்கினார். முதன்மைச் செயலாளராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன், மலம்அள்ளும் தொழிலாளர் சட்டம் கொண்டு வந்தபோது, சார்பு செயலாளர் இருக்கைக்கு சென்று வார்த்தைகளை மாற்றி மாற்றி அந்தச் சட்டத்தையும், சட்டத் திருத்தத்தையும் செம்மைப்படுத்தினார்” என்றார்.மக்கள் இயக்கங்கள் இல்லாமல் எந்தசட்டமும், திட்டமும் அமலாகாது. அத்தகையபோராட்டத்தை இடதுசாரி இயக்கம் தொடர்நதுமுன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,சவுத் விஷன் நிறுவன ஆசிரியர் எம்.பாலாஜி,முதன்மை ஆசிரியர் த.நீதிராஜன், உரிமையாளர் கே.வேணி, நூல் மொழிபெயர்ப்பாளர் ஆனந்தன், வீ.பா.கணேசன், நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;