tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர் சம்மேளன வெள்ளிவிழா

சென்னை:

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை செங்குன்றத்தில் வி.குமார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே. மகேந்திரன், சிஐடியு மாநில உதவித்தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் மாநாடு 1994 ஆகஸ்ட் 7,8 ல் சென்னையில் நடை பெற்றது. சம்மேளனம் துவங்கி 25 ஆம் ஆண்டு நடைபெறுவதால் 2019ஆகஸ்ட் துவங்கி 2020 ஆகஸ்ட்வரை ஓர் ஆண்டுக்கு வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வெள்ளி விழாவின் துவக்க நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதம் இராமநாதபுரம் மாவட்டத்தில் துவக்குவது என்றும், மாநிலம் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி அடுத்த ஆண்டு ஆகஸ்டில் சம்மேளனம் துவங்கிய சென்னை மாவட்டத்தில் நிறைவுவிழாவை சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. வெள்ளிவிழா ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ சங்கம் சார்பில் புதிய ஊழியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிஐடியு (50 வது ஆண்டு) பொன்விழா, தொழிற்சங்கம் துவங்கி நூறாண்டு ஆகியவற்றையும் ஆட்டோ தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.


மேலும் காரைக்குடியில் ஆரோக்கிய ராஜ் என்ற தொழிலாளி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தர்மபுரி நகரத்தில் பல ஆண்டுகாலமாக செயல்படும் ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடியை கைவிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


மேற்கண்ட தகவலை சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி தெரிவித்துள்ளார்.

;