அ.சவுந்தரராசன் கண்டனம்
திருவள்ளூர், மே 19- ஒடிசா மாநில தொழிலாளர்கள் மீது செங்கல் சூளை உரிமையாளர் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளார். குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆயிலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுகுப்பத்தில் ஜிடிஎம் என்ற தனியார் செங்கல் தொழிலகம் செயல்படுகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 119 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேர் பணியாற்றி வருகின்றனர் இந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு நடந்தே செல்ல உள்ளதாக கூறியுள்ளனர். அதற்கு செங்கல் சூளை உரிமையாளர் முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து முனுசாமி தொழிலாளர்களை தகாத வார்த்தைகளில் பேசியதோடு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ஒரு தொழிலாளிக்கு கண், காது, தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பெண்கள் சிலம் காயம் அடைந்துள்ளனர். இது செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யா தலைமையில் வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.
அ.சவுந்தரராசன் கண்டனம்
செங்கல் சூளையில் பணியாற்றிய ஒடிசா மாநில தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்துவதோடு, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும், உணவு, போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார்.
கைது செய்க
தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஏப்ரல் மாத சம்பளம், பயணப்படி, நிலுவையில் உள்ள வேலை செய்த நாடுகளுக்கான ஊதியம் மற்றும் இறுதி பணப் பயன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிஐடியூ மாவட்ட தலைவர் கே.விஜயன் வலியுறுத்தி உள்ளார்.