இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (18-6-2024) புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளது.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று வெளியுறவுத்துறை அமைச்சரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.