tamilnadu

img

நலவாரிய செயல்பாடுகளை சீரமைத்திடுக!

சென்னை:
நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி வியாழனன்று (ஆக.1) தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலகங்கள் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கேட்பு விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலித்து விரைவாக பணப்பலன்களை வழங்க வேண்டும். பதிவு, பணப்பயன்களுக்கு அதிகாரிகள் சான்றொப்பம் கேட்கக் கூடாது, அற்ப காரணங்களை கூறி பணப் பலன்களை மறுக்கக் கூடாது, கல்வியாண்டு முடிவதற்குள் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். மாதம் இருமுறை நலவாரிய பதிவு முகாம்களை நடத்த வேண்டும்.

நலவாரிய உதவிகளை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்க வேண்டும், விபத்து மரணத்திற்கு 5 லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும், நலவாரிய உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை இதன் ஒரு பகுதியாக வடசென்னை, தென்சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் தி.நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நலவாரிய சென்னை மாவட்ட துணை ஆணையர் சுபசாந்தி சங்கத்தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், உறுப்பினர் பதிவு, பணப்பயன்களுக்கு அதிகாரிகளின் சான்றொப் பம் தேவையில்லை. ஓய்வூதியம், திருமணஉதவித் தொகையை விரைந்து வழங்கப் படும். கல்வி உதவித்தொகை பெற தற்காலிகசான்றிதழே (ஃபோனோபைட் சர்டிபிகேட்) போதுமானது. நலவாரிய பதிவுக்கு முகாம் நடத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள், மோட் டார் வாகன தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.இப்போராட்டத்திற்கு சிஐடியு வட சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இ. பொன்முடி, பா. பாலகிருஷ்ணன், ஏ.பழனி, என். கிருஷ்ண மூர்த்தி (தென்சென்னை), சி. திருவேட்டை, குப்புசாமி, மணிமேகலை (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர். திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, நெல்லை, கோவை, திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;