tamilnadu

img

10 ஆண்டுகளுக்குப் பிறகு கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு...

சென்னை:
பாசனத்திற்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலையில் கடனாநதி, ராமநதி அணைகள் திறக்கப்பட்டன.  தென்காசி மாவட்டத்திலுள்ள பிரதான அணைகள் கடனாநதி மற்றும் ராமநதி அணைகளாகும். இந்த அணைகளிலிருந்து கார் சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும்.கடந்த பத்து ஆண்டுகளாக போதிய நீரிருப்பு இல்லாத காரணத்தால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

இந்நிலையில், நிகழாண்டு போதிய நீர் இருப்பு உள்ளதையடுத்து திங்கள்கிழமை கார்சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை கடனாநதி மற்றும் ராமநதி அணைகளில் இருந்து திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தண்ணீர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலை வகித்தார்.கடனாநதி அணை மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கீழாம்பூர், மன்னார்கோவில், அயன் திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளகால், புதுக்குடி, பனஞ்சாடி,ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் அரசபத்து, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் பெருங்கால், மஞ்சப்புளி, காக்கநல்லூர், காங்கேயன், வடகுருவைபத்து ஆகிய கால்வாய்களின் மூலம் நேரடி பாசனத்தில் 3987.57 ஏக்கர் விவசாய நிலங்களும் 82 குளங்களின் மூலம்மறைமுகமாக 5935.65 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசனவசதிபெறும்.ராமநதி அணை மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், இடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம்உள்ளிட்ட கிராமங்களில் வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால்வாய்கள் மூலம் 1008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;