tamilnadu

img

அதிமுக - பாஜக அணியின் தோல்வி பயமே ரெய்டு...மு.க.ஸ்டாலின் விமர்சனம்...

சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகங்களிலும், திமுக இரண்டு எம்எல்ஏக்களின் இல்லங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் அஞ்சமாட்டோம்: மு.க. ஸ்டாலின்
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்.மேலும் அவர் பேசியதாவது:-

இன்று காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து இறங்கினேன். திருச்சியிலிருந்து காரில் புறப்பட்டு இந்தஜெயங்கொண்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அது என்ன செய்தி என்றால், என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர்உள்ளே புகுந்து, காவல்துறை அதிகாரிகள் 100 பேர் பாதுகாப்போடு சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.அதாவது அதிமுக அரசை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டு இருப்பதுபாஜகவின் மோடி அரசு. ஏற்கனவே சோதனைகள் பல நடத்தி அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டில்உரிமைகள் எல்லாம் பறித்திருக்கிறார் கள். ஐ.டி., சி.பி.ஐ வைத்து எல்லோரையும் மிரட்டுகிறார்கள்.

நாம் ஒன்றை மட்டும் மோடிக்கு சொல்கிறேன். இது திமுக மறந்து விடாதீர்கள். நான் கலைஞருடைய மகன். இந்தசலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன்தான், எமர்ஜென்சி காலத்தையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனை நடத்தினாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.அதாவது தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. எனவேஇவர்களை எப்படியாவது மிரட்டி, அச்சுறுத்தி அவர்களை வீட்டில் படுக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தி.மு.க.காரனிடம் நடக்காது. அது அதிமுகவினரிடம்தான் நடக்கும்.அவர்கள் மாநில உரிமைகளை இன்றைக்கு விட்டுவிட்டு உங்கள் காலில்விழுந்து இருக்கலாம். ஆனால் நாங்கள்பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சிட மாட்டோம். எந்த சலசலப்பிற்கும் அஞ்சிட மாட்டோம். இதற்கெல்லாம் மக்கள் பதில் தரும் நாள் தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதைமறந்து விடக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

பாஜகவின் பூச்சாண்டி:  துரைமுருகன் காட்டம்
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “ஐடி ரெய்டுகள் போன்ற பூச்சாண்டிகளுக்கு அஞ்சுகின்ற இயக்கம் திமுகஅல்ல. ரெய்டுகள் மூலம் திமுகவை மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு ஒன்றுமில்லை” என்றார்.

பாஜகவின் பகல் கனவு: கே.எஸ். அழகிரி
தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் கடைசி ஆயுதமாக வருமான வரித் துறையை பாஜக பயன்படுத்தி வருகிறது.இதன்மூலம் திமுகவை முடக்கிவிடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

வெற்றியை தடுக்க முடியாது: தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்திருக்கும் அறிக்கையில்,“ பாஜக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உள்நோக்கம் கொண்டது: இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலசெயலாளர் இரா.முத்தரசன், “இதுமுழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. தோல்வி பயத்தால் மற்ற கட்சிகளை அதிகார பலம் கொண்டு அடக்க பார்க்கிறது. ஆனால் மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது, ஐ.டி. சோதனை பா.ஜனதா அரசின் திட்டமிட்ட பழிவாங்கல்நடவடிக்கை. இதனால் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்றார்.எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச் சோதனை திட்டமிட்டு  நடத்தப்படுவதாகவும், அரசியல் ரீதியான சோதனைகளை மக்கள் அறிவார்கள் என்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலரிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் மனு அளித்துள்ளார்.

;