tamilnadu

img

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை கைவிடுக.... ஒன்றிய அரசுக்கு வாலிபர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசுகைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்திய நாடு முழுவதும் 75 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக சர்வதேச ஏலத்தை இந்திய அரசின் எரிசக்தித் துறை அறிவித்துள்ளது. இந்த 75 இடங்களில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியும் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியும் பட்டியலிடப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம்  உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசால் 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இப்பகுதிகளில் புதிதாக எண்ணெய் கிணறுகள்  அமைக்கஅனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் எண்ணெய் கிணறு அமைப்பதற்காக சர்வதேச ஏலம் விடும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதாக உள்ளது. மேலும், பவளப்பாறைகள் அதிகமுள்ள மன்னார் வளைகுடா பகுதியில்  எண்ணெய் கிணறு அமைப்பது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய  அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.ஏற்கனவே, ஒன்றிய அரசு நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில்இந்தியா நிறுவனங்கள் இப்பகுதி களில் எண்ணெய் எடுப்பது வர்த்தக ரீதியாக  சாத்தியமானதில்லை என்றுகைவிட்டுள்ளது. இத்தகைய சூழலில், இப்பகுதிகளில் நில மற்றும் நீர்வளத்திற்கு ஆபத்தான பிராக்கிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி எண்ணெய் எடுப்பதற்கு  அனுமதிக்கும் வகையில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையை இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்த ஏல அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய அரசைவாலிபர்  சங்கம் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் நேரிலும் வலியுறுத்திய தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. மேலும், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக இந்திய மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ஒன்றிய அரசால் 2016ம்ஆண்டு கொண்டுவரப்பட்ட புதியஎண்ணெய் எடுப்புக் கொள்கையை யும் (Hydrocarbon Exploration Licensing Policy-HELP), 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை யையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி  நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு  கடிதம் எழுதியிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இக்கோரிக்கையை நிராகரிப்பதுடன் தமிழக மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் துணைபோகக் கூடாது என தமிழக அரசை இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;