சென்னை, மே 3-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதாகக் கூறி வாக்கு கேட்க இயலாத நரேந்திர மோடி மலிவான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்ல இயலாத நிலையில் பாகிஸ்தான் எதிர்ப்பை பேசுகிறார். துல்லிய தாக்குதல் நடத்தியது குறித்து மார்தட்டிக் கொள்கிறார். பயங்கரவாதத்தை எதிர்க்கும் மாவீரனாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.சர்வதேச தீவிரவாதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச தீவிரவாதி மசூத் அசாரை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை வாஜ்பாய் அரசு தான் விடுதலை செய்தது என்பதை எவரும் மறந்திட இயலாது. பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் நரேந்திர மோடி போபால் மக்களவை தொகுதியில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிக் கொண்டிருக்கிற பிரக்யாசிங் தாகூரை பாஜக வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்.இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. மே 23 ஆம் தேதிக்குப் பிறகு பாஜக ஆட்சி இருக்காது; நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியது கள நிலவரத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். தேர்தல் பிரச்சாரத்தை திசைத் திருப்புவதற்காக மோடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் கடுமையாக தோல்வியடைந்து வருகின்றன. விதவிதமான அவதூறுகளை பரப்பி வருகிறார். இதையெல்லாம் கேட்டு மக்கள் சலிப்படைந்து கடுமையாக பாடம் புகட்டி வருகிறார்கள். எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிற அதே நிலையில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. ஆட்சி போன மறுநாளே அதிமுக கூடாரம் காலியாகப் போகிறது. தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படப் போகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.